சென்னை மாநகராட்சியின் 2023-24ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையில் பொதுமக்களின் குறைகளைக் கண்டறிந்து, அவற்றின் மீது உடனடி தீர்வு காணும் வகையில், “மக்களைத் தேடி மேயர்” என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
15 நாட்களுக்கு ஒரு முறை ஒரு வட்டார அலுவலகத்தில், பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை நேரடியாகப் பெற்று உடனடி நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக திட்டத்தை ராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட வடக்கு வட்டார துணை ஆணையாளர் அலுவலகத்தில் மேயர் பிரியா தொடங்கி வைத்தார். அப்போது பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை அவர் பெற்றுக்கொண்டார்.
பின்னர் மேயர் பிரியா செய்தியாளர்களிடம் கூறுகையில், "மக்களைத் தேடி மேயர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சாலைப் பணிகள், மழைநீர் வடிகால், பூங்கா சீரமைப்பு, பிறப்பு - இறப்புச் சான்றிதழ்கள், வரி செலுத்துதல் தொடர்பான கோரிக்கைகள் உள்ளிட்டப் பல்வேறு பிரச்னைகளுக்கு மக்கள் நேரடியாக மனு அளிக்கலாம். குறிப்பிட்ட நாட்களுக்குள் தீர்வு காணப்படும். கோரிக்கை மனு அளிக்கும்போது ஒப்புகைச் சீட்டு தரப்படும். அதில் ஒரு லிங்க் உள்ளது. அதைப் பயன்படுத்தி கோரிக்கை எந்த நிலையில் உள்ளது? யார் அதற்கு பொறுப்பு? உள்ளிட்ட தகவல்களை மக்கள் தெரிந்து கொள்ளலாம்.