சென்னை: சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையம் (NCSC-DA) மற்றும் ஐ.டி.சி. கிராண்ட் சோலா இணைந்து சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்ச்சியை நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் NCSC-DA நடத்திய வேலை வாய்ப்பு முகாமில் தேர்வான மாற்றுத்திறனாளிகள் 15 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியம், "உலக மாற்றுத்திறனாளிகள் தினைத்தையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் தலைமையில் காலை நிகழ்ச்சி நடைபெற்றது. 15 மாற்றுத்திறனாளிகளுக்கு ஐ.டி.சி நிறுவனம் வேலைவாய்ப்பினை வழங்கியுள்ளது.
இது போல் மற்ற தனியார் நிறுவனங்களும் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பினை கொடுத்தால் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை இல்லை என்ற நிலை இருக்காது. இதற்காக அரசும் வேலை செய்கிறது, தனியார் நிறுவனங்களும் செய்ய வேண்டும். அரசு மருத்துவர்களுக்கு உயர் சிறப்பு பட்ட மேற்படிப்புக்காக (சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்பு) 50% இட ஒதுக்கீட்டு மூலம் மாநில அரசே நிரப்பிக்கொள்ளலாம் என்ற தீர்ப்பு வந்துள்ளது. இது அரசு மருத்துவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சூப்பர் ஸ்பெஷாலிடி படிப்பில் 100% இட ஒதுக்கீட்டையும், ஒன்றிய அரசே நிரப்பும் என்ற தீர்ப்புக்கு எதிரான மேல் முறையீட்டு வழக்கில் மாநில அரசுக்கான உரிமை உறுதிபடுத்தப்பட்டு உள்ளது.
சென்னை எம்.ஜி.ஆர் நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்தேகமாக செயற்கை கை, கால்கள் உள்ளிட்டவற்றை தயாரிக்கும் கட்டிடம் 39 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமான பணிகள் 15 நாட்காளில் முடியும் நிலையில் உள்ளது. இதை முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளார்.