சென்னை:உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்பியும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக மல்யுத்த வீராங்கனைகள் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பதவியிலிருந்து பிரிஜ் பூஷணை நீக்கக் கோரியும், அவரை கைது செய்யக் கோரியும் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி முதல் மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வினேஷ் போகாட், சாக்சி மாலிக், பஜ்ரங் புனியா உள்ளிட்ட ஏராளமானோர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள், கடந்த 28ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடம் நோக்கி பேரணி செல்ல முயன்றபோது போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இத்தனை நாட்களாகியும் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பிரிஜ் பூஷண் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததை கண்டித்து, சாக்சி மாலிக், பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் தங்களது பதக்கங்களை கங்கை நதியில் வீச முற்பட்டனர். அப்போதும் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், விவசாய சங்கங்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பல்வேறு சமூக அமைப்பினர் மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக சென்னையில் இன்று(ஜூன் 4) போராட்டம் நடைபெற்றது. மக்கள் பாதை, யுனைடெட் இந்தியா உள்ளிட்ட அமைப்பினர் சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பாஜக எம்பி பிரிஜ் பூஷண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.