இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொழிலாளர்கள் அணியின் மாநிலச் செயலாளர் பொன்னுச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “2014ஆம் ஆண்டு தொடங்கி 2019ஆம் ஆண்டு வரை கடந்த ஆறு ஆண்டுகளில் பால் விற்பனை விலை சுமார் 28 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதன் மூலம் பொதுமக்களுக்கு கடுமையான நிதி நெருக்கடியை ஏற்படுத்திய தனியார் பால் நிறுவனங்கள், 2020ஆம் ஆண்டின் தொடங்கத்திலேயே லிட்டருக்கு 2 ரூபாய் முதல் 6 ரூபாய் வரை உயர்த்தி அதிர்ச்சியளித்தன.
அதைத்தொடர்நது, இரண்டாவது முறையாக பிப்ரவரி 21, 22 ஆகிய தேதிகள் முதல் தனியார் பால் நிறுவனங்கள் ஒவ்வொன்றாக பால் விற்பனை விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்த தொடங்கியுள்ளது. அச்செயல் கண்டிக்கப்பட வேண்டியது மட்டுமல்ல உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டியதாகும். பால் கொள்முதல் விலையில் தனியார் நிறுவனங்கள் பால் உற்பத்தியாளர்களான விவசாய பெருமக்களுக்கு சொற்ப அளவில் விலை கொடுத்து விட்டு, தங்களின் லாபத்திற்காக அதனை பல மடங்காக விற்பனைச் செய்து வருவது நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது.
கூட்டுறவு பால் நிறுவனமான ஆவின் நிறுவனம், பல ஆண்டுகளாக இலக்கே இல்லாமல் செயல்படுகிறது. அதன் வருமானத்தை ஊழல் பெருச்சாளிகள் சுரண்டுவதை, தமிழ்நாடு அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. எனவே தனியார் பால் நிறுவனங்களை முறைபடுத்தி பால் விற்பனை விலையை கட்டுப்படுத்தவும், பால் தட்டுப்பாட்டை சரிக்கட்ட அதன் தேவைக்கேற்ப இறக்குமதி செய்ய மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து அவசியம் மட்டுமல்ல அவசரமும் கூட.
அதற்காக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்காவிட்டால், வெங்காயத்திற்கு ஏற்பட்ட நிலை தான் பாலுக்கும். விவசாய பொருட்களான நெல், கரும்பு உள்ளிட்டவைகளுக்கு குறைந்தபட்ச விலையை தமிழ்நாடு அரசே நிர்ணயம் செய்வது போல, ஒட்டுமொத்த பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையையும் அரசே நிர்ணயம் செய்ய வேண்டும். அப்படியில்லையென்றால், தொடர்ந்து பாதிக்கப்படும் மக்களுக்கு, அதற்கான விலையை ஆட்சியாளர்கள் மக்கள் மன்றத்தில் கொடுத்தே தீர வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:'மேல் சாதிக்கு அடங்கி நடப்பது' - சவுக்கடி கொடுத்த கமல்ஹாசன்