தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேளச்சேரியில் சிங்கப்பூரை களமிறக்கும் மநீம வேட்பாளர் சந்தோஷ் பாபு - Mnm santhosh

சென்னை: 'என்னதான் ஹைப்பர் டிஜிட்டல் பரப்புரையில் ஈடுபட்டாலும் மக்களை நேரடியாக சந்திக்காதது சற்று பின்னடைவுதான்' என்கிறார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேளச்சேரி சட்டப்பேரவை தொகுதி வேட்பாளர் சந்தோஷ் பாபு.

santhosa babu
சந்தோஷ் பாபு

By

Published : Apr 4, 2021, 5:59 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சியினரும்மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். ஆனால், தேர்தலில் வேட்பு மனுத் தாக்கல் செய்தது முதலே, டிஜிட்டல் வழியாக பரப்புரையில் ஈடுபட்டு வருபவர்தான் சந்தோஷ் பாபு.

இவர் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வேளச்சேரி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடுகிறார். வேட்பு மனு தாக்கல் செய்த அடுத்த நாளே, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, காணொலி பரப்புரை, வாட்ஸ்அப்பில் கொள்கைகளைப் பகிருவது என டிஜிட்டல் பரப்புரையை கையில் எடுத்தார். இவர் தமிழ்நாடு அரசு இணையச் சேவை, பாரத் நெட் உள்ளிட்ட டிஜிட்டல் மயமாக்கும் திட்டங்களில் முக்கிய பங்காற்றியுள்ளார். தொழில்நுட்ப துறை முதன்மை செயலாளராக இருந்த அவர், பாரத் நெட் டெண்டர் விவகாரத்தையடுத்து விருப்ப ஓய்வு பெற்றார். தற்போது, கரோனா தொற்றிலிருந்து குணமடைந்ததால், மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.

இதுகுறித்து அவர் ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில், " நாட்டை டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என்பது தான் எனது கனவு. தற்போது, அதற்கு முன்பாக எங்கள் கட்சியை முழுவதுமாக டிஜிட்டல் மயமாக்கியுள்ளோம். மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்களிடம் விருப்ப மனு பெறும் நடைமுறை முழுவதும் காகிதம் இல்லாமல் இணைய வழியில் நடத்தப்பட்டது.

மநீம வேட்பாளர் சந்தோஷ் பாபு உடன் சிறப்பு நேர்காணல்

அதிநவீன பிளாக் செயின் தொழில்நுட்பத்தை முதன்முதலாகப் பயன்படுத்திய அரசியல் கட்சி நாங்கள்தான். பாரத் நெட் டெண்டர் விவகாரத்தில் மிகப் பெரிய அளவில் ஊழல் நடைபெற்றுள்ளது. அதனைப் பற்றி பேச விரும்பவில்லை. எதிர்க்கட்சிகள் மீது சேற்றை வாரி இறைக்க வேண்டாம் என்பதால் அமைதியாக உள்ளேன். பணம் சம்பாதிக்க நான் அரசியலுக்கு வரவில்லை. மாற்றத்தைக் காண வேண்டும் என்பதற்காகவே வந்துள்ளேன். மக்கள் நீதி மய்யம் கட்சி நேர்மையானது என்பதால் அதனைத் தேர்ந்தெடுத்தேன். இந்தத் தேர்தலில் தோல்வி பெற்றாலும், வேளச்சேரி மக்களுக்காகத் தொடர்ந்து பணியாற்றுவேன்" என்றார்.

தொகுதிக்கான வாக்குறுதிகள் என்ன?

  • வேளச்சேரியில் மழைக் காலங்களில் வெள்ள நீர் தேங்குதல் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. இது எளிமையாகச் சரிப்படுத்தக்கூடிய பிரச்சனை என்றாலும், தற்காலிக தீர்விற்குப் பதிலாக நிரந்தர தீர்வை அளிக்க முடிவு செய்துள்ளோம்.
  • இங்கிருக்கும் கழிவுநீர் வடிகால் குழாய்கள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படாமல் உள்ளது. சிங்கப்பூரில் 8,000 கிலோ மீட்டருக்கு கழிவுநீர் வடிகால் குழாய்கள் இணைக்கப்பட்டிருக்கும். அதைப் போல, வேளச்சேரியிலும் ஒன்றுபட்ட திட்டமிடப்பட்ட நகரத்தைக் கட்டமைக்க வேண்டும்.
    வேளச்சேரி தொகுதிக்கான வாக்குறுதிகள்
  • பெண்கள் தண்ணீர் லாரியை சுற்றி சண்டையிட்டுக்கொண்டிருக்கும் நிலையை மாற்றுவதற்காக, நீர் மேலாண்மையில் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது. ஏழை, பணக்காரன் என்று பேதமில்லாமல் அனைத்து வீடுகளுக்கும் குழாய் வசதி மூலம் குடிநீர் வழங்கப்படும்.
  • நீண்டகாலமாகத் தொகுதியில் வசிக்கும் மக்களுக்கு பட்டாக்கள் வழங்கப்படும். மக்களின் அடிப்படை பிரச்னைகளை சீரமைப்பது தனது முக்கிய நோக்கமாகும்.

இவரின் டிஜிட்டல் பரப்புரை மக்கள் மத்தியில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது தேர்தல் முடிவுகளுக்குப் பிறகுதான் தெரியும்.

இதையும் படிங்க:சினிமா ஹீரோ போல விளம்பரம்: கன்னியாகுமரி பாஜக vs காங்கிரஸ்!

ABOUT THE AUTHOR

...view details