இதுகுறித்து கமல் ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா பெருந்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. கொள்ளை நோய் பரவும் பேரிடர் கால நெருக்கடியைப் பயன்படுத்திக்கொண்டு சில தனியார் மருத்துவமனைகள் ஈவிரக்கமின்றி நடந்து வருகின்றன. எரிகிற வீட்டில் பிடுங்கியவரை லாபம் என மருத்துவக் கட்டணங்களைப் பல மடங்கு உயர்த்தியுள்ளனர்.
லட்சக்கணக்கான ரூபாய் முன்பணமாக செலுத்தினால்தான் அனுமதி. அப்படி செலுத்தும் பணத்தில் பாதியை கணக்கில் வராத கருப்புப் பணமாகத் தரவேண்டும். ரசீது கிடையாது, எப்போது கிளம்பச் சொன்னாலும், டிஸ்சார்ஜ் சம்மரி இல்லாமலேயே கிளம்பி விட வேண்டும் என அடாவடி செய்கிறார்கள். எவ்வளவு பணம் கொடுத்து வேண்டுமானாலும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள பணம் படைத்தவர்கள் தயாராக இருப்பதால், இந்த நெருக்கடியைப் பயன்படுத்திக்கொண்டு பகற்கொள்ளை அடிக்கின்றனர்.
உதாரணமாக, நுரையீரல் தொற்று எந்தளவிற்கு உள்ளது என்பதைத் தெரிந்து கொள்வதற்கான சிடி ஸ்கேன் கட்டணம் ரூ.1500/-ல் தொடங்கி ரூ.8,000/- வரை விதம் விதமாக வசூலிக்கப்படுகிறது. ஆர்டிபிசிஆர் சோதனைக்கு ரூ.3,000/-தொடங்கி ரூ.10,000/- வரை வசூலிக்கிறார்கள். இப்படியாக கொரோனா சிகிச்சையின் ஒவ்வொரு அலகிலும் கொள்ளை நிகழ்கிறது.