சென்னை:மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னை மாங்காடு பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் மாநில நிர்வாகிகள், மண்டலச் செயலாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் என சுமார் 600 பேர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும், மக்களவைத் தேர்தலில் வெற்றிக்கான வியூகத்தை வகுப்பது தொடர்பாகவும் கட்சியினருக்கு கமல்ஹாசன் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் நிர்வாகிகள் மத்தியில் பேசிய கமல்ஹாசன், “மாற்றத்திற்காக அரசியலுக்கு வந்துள்ளேன். சினிமாவில் நடிக்கும் இவர் அரசியலில் நீடிப்பாரா என்று கேட்கிறார்கள். நான் அரசியலில் எப்போதும் இருப்பேன்.
'தோல்வியைக் கண்டு துவண்டுவிடக்கூடாது':காந்தி இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக்கொடுத்தார் என்று சொன்னால் ஆர்.எஸ்.எஸ்காரர்களுக்கு கோபம் வந்துவிடும். மக்கள் நீதி மய்யத்தின் கொள்கை விளக்கம் விரைவில் வெளியிடப்படும். வெற்றியின் மறுபக்கம் தான்தோல்வி,தோல்வியைக் கண்டு துவண்டால், இன்று 'விக்ரம்' படம் இல்லை.
நான் கட்சியில் ஒருவரை மதித்து என் மடியிலேயே வைத்திருந்தேன். பாதியிலேயே எனக்கு சந்தேகம் வந்தது. அவர் எனக்கு துரோகம் செய்துவிட்டார். அவர் துரோகி தான். எனது தேவை 39 பேர் வேண்டும், 234 பேர் வேண்டும். அவர்களுக்குத் தலைமை என்னும் தகுதி வேண்டும்.
நாணம் கடந்த தேர்தலில் தோல்வி அடைந்துவிட்டோம். அதையே சொல்லிக்கொண்டு இருக்காதீர்கள். இப்போது உச்சியில் சூரியன் இருக்கிறது. நாம் ஓடுவதை நிறுத்திவிட்டால், சிங்கம் விரட்டும் மான்களாகி வேட்டையாடப்படுவோம். எனக்கு நிறைய மனம் புண்படுகிறது. ஆனால், நான் அழமாட்டேன்.
ஆட்சியாளர்களுக்குத்தான் அவமானம்: நாட்டை விட்டுப்போவேன் என்று நான் சொன்னது எனக்கு அவமானம் இல்லை. ஆட்சியில் இருந்து ஆண்டவர்களுக்குத்தான் அவமானம். மக்கள் நீதி மய்யம் கட்சியே போராடும் கட்சி தான். அம்பானி, அதானியிடம் இல்லாத ஒன்று நம்மிடம் இருக்கிறது அதுதான் மக்கள் பலம்.