கரோனா தொற்றுப் பரவலை கட்டுக்குள் கொண்டுவர நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தொழிற்கூடங்கள், போக்குவரத்து, விவசாயம் என நாடு முழுவதும் நடைபெற்று வந்த அனைத்து சேவைகளும் வணிக நிறுவனங்களும் இயங்கத் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், மத்திய, மாநில அரசுகள் கடந்த மே நான்காம் தேதி முதல் ஊரடங்கு விதிகளில் சில தளர்வுகள் செய்து அறிவித்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் மீண்டும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் இன்று முதல் திறக்கப்படவுள்ளதாக அரசு அறிவித்தது.
தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பிற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே மக்கள் வெளியே வர வேண்டும் என்ற கட்டுப்பாடுகளோடு ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், எதன் அடிப்படையில் மதுக்கடைகளை திறப்பதற்கு அரசு முடிவு செய்கிறது? மது யாருடைய அத்தியாவசியத் தேவை?
தங்கள் சாராய ஆலைகளின் விற்பனை குறைந்தது குறித்து கவலையில் உள்ள ஆண்ட, ஆளும் கட்சியினர், 40 நாட்களாக தொழில் இல்லாமல், வருமானமின்றி தவிக்கும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்துங்கள் என்ற பலரது கோரிக்கைகளை கேட்கும் திறன் இல்லாமல் செயல்படுகின்றனர். இந்த வியாபாரத்தில் கொள்ளை லாபம் அடிப்பவர்களுக்கு மட்டுமே மதுக்கடைகளை திறக்க வேண்டிய அவசியம் என்ன என்பது தெரிந்திருக்கக் கூடும்.