தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயம்பேடு நோய் விநியோக நிலையமாக மாற ஆளும் அரசியல் வியாபாரிகளே காரணம் : கமல்ஹாசன் அறிக்கை - Makkal Needhi maiam party chief about Tasmac reopen

சென்னை : ஊரடங்கு தளர்வின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், இதனைக் கண்டித்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

By

Published : May 8, 2020, 10:51 AM IST

இதுதொடர்பாக அவர் வெளியிடடுள்ள அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஒரு வைரஸ் கிருமிக்கு இருக்கும் உயிர் வாழும் ஆசைகூட, தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்காது என, திண்ணமாக நம்பும் ஒரு அரசு நமக்கு வாய்த்தது ஏன்? வாக்குக்கு காசு வாங்கி, ஐந்து வருடங்கள் நம் வாழ்வை இவர்களுக்கு குத்தகைக்கு விட்டு விட்டோமே, அதன் விளைவுதான்.

பஞ்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டில், மதுக்கடைகளை திறந்துவிட்டால் மக்களின் கவனம் திரும்பி விடும் என நம்பும் அரசுக்கு பெயர் ’அம்மாவின் அரசா’? தாயுள்ளம் கொண்டோர் அனைவருக்கும் அவமானமல்லவா அது? இலவசமாக எத்தனை தாலிகள் தந்தாலும், வேலையில்லாத குடிகாரனால் வீட்டுத் தாலி பறிக்கப்பட்டு, அடகுக்கடைக்கு போகும், பின் அரசு நடத்தும் சாராயக் கடைகள் மூலம் அரசுக்கே வந்து சேரும் என்று தெரியும் தமிழ்நாட்டை ஆள்பவர்களுக்கு.

ஓட்டுக்கு இத்தனை ஆயிரம், விலையில்லா பொருள் இத்தனை ஆயிரம் என ஐந்து வருடத்திற்கு ஏழைத் தமிழர்களை குத்தகைக்கு எடுத்த அரசு, இன்று ஆட்சி கவிழும் தருவாயில் வசூல் வேட்டையில் இறங்கி இருக்கிறது. ஆண்டவர்களும், ஆள்பவர்களும் இந்த வசூல் கொள்ளையில் பங்குதாரர்கள் என்பது ஊரறிந்த ரகசியம்.

இன்று சொல்கிறேன்... இந்த அரசு செய்யும் தொடர் அபத்தங்களை நிறுத்தாவிட்டால், சுனாமி கொண்டு சென்ற உயிர்களை விட அதிகமான உயிர்களை இந்த நோய் காலத்தில், அரசு தற்போது திறந்து விட்டுள்ள சாராய ஆறு கொண்டு செல்லும். அப்படி எதுவும் நடந்தால், தமிழ்நாட்டின் தலைமை கொலைக் குற்றத்தை ஏற்று பதவி விலகவா போகிறது?

சிறைக்கு அனுப்பினாலும் தொடரும் இந்த ஊழல் சங்கம், கரோனாவை விட அதிக தமிழ் மக்களைக் கொல்லும். கரோனா தொற்றிற்கு தப்லிக் ஜமாத்தை மட்டுமே காரணம் காட்டிய பலர், கோயம்பேடு, நோய் விநியோக நிலையமாக மாறியதற்கு, ஆளும் அரசியல் வியாபாரிகளைத் தவிர, வேறு யாரைக் குற்றம் சாட்ட முடியும். கிராமங்கள் எங்கும் டாஸ்மாக் வாசலில் திருவிழாக் கூட்டம். கொள்ளை நோய் ஒரு பக்கம், அரசுகளின் தொடர் கொள்ளை இன்னொரு பக்கம். தாங்குமா தமிழகம்?

வெகுண்டெழு தமிழகமே, வேறு தலைமை தேடு. வெள்ளையரை வெளியேற்றிய நமக்கு, இந்த கொள்ளையரையும் வெளியேற்றும் காலம் நெருங்கிவிட்டது. உண்மையில் இது யாருக்கான அரசு? இது வரை கிடைத்த தடயங்களை பார்க்கையில் மனசாட்சி என்று ஒன்று உங்களுக்கு இருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை இருந்தால் அதை தொட்டுச் சொல்லுங்கள். இல்லையேல் மேலிடத்தில் கேட்டுச் சொல்லுங்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க :'நாம் தமிழர் கட்சி பொறுப்பாளரை உடனடியாக விடுதலை செய்யவேண்டும்' - சீமான்!

ABOUT THE AUTHOR

...view details