சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், “துணிச்சலோடு களத்தில் இறங்கி, மிக்ஜாம் புயலின் கோர தாண்டவத்தைப் பற்றி உடனுக்குடன் செய்திகளை வெளியிட்ட பத்திரிகையாளர்களைப் பாராட்டுகிறேன்.
கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஒரு கனமழை பெய்திருக்கிறது. இது ஒரு சவாலான காலகட்டம். பருவநிலை மாற்றங்களால் இது போன்ற பேரிடர்கள் எதிர்காலத்தில் அடிக்கடி நிகழும் என அறிவியலாளர்கள் எச்சரிக்கிறார்கள். அதற்கு நாம் தயாராக வேண்டும். குறுகிய கால அவகாசத்திற்குள் அதிக அளவு மழைப்பொழிவு என்பது சமீப காலமாக வடஇந்தியாவிலும், உலகின் சில நாடுகளிலும் அடிக்கடி நிகழ்கிறது. பொதுமக்களிடம் பேரிடர் மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது அரசின் கடமை.
நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துவதும், நோய்த்தொற்று பரவாமல் பார்த்துக் கொள்வதும்தான் இப்போது அரசு உடனடியாகச் செய்ய வேண்டியவை. பள்ளிகள், கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்கள் முறையாக கிருமி நீக்கம் செய்த பிறகே பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும்.
மேலும், எதிர்காலத்தில் இது போன்ற பேரிடர்கள் நிகழாமல் இருக்கவும், நிகழ்ந்தால் நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்குமான வழிமுறைகளை இதற்குரிய நிபுணர்களுடனும், அறிஞர்களுடனும் அரசு கலந்து பேசி, புதிய வழிவகைகளைக் காண வேண்டும். மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்கள் மீட்புப் பணிகளில் பல்வேறு வகைகளில் உதவி கொண்டிருக்கிறார்கள்.