சென்னை:வடமாநில இளைஞர்கள் குறித்து இனவெறியை தூண்டும் வகையில் தொடர்ந்து பேசிவரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் சாட்டை திருமுருகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மக்கள் அதிகாரம் சார்பில் இன்று (பிப். 18) சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் அதிகாரம் இயக்கத்தின் மாநில செயலாளர் வெற்றிவேல் செழியன், "வடமாநில இளைஞர்கள் பலர் தங்களது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக தமிழகத்திற்கு வந்து வேலை பார்த்து வரும் நிலையில், அவர்களை அடித்து துரத்த வேண்டுமென தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் சாட்டை துரைமுருகன் பேசி வருகின்றனர்.
குறிப்பாக, நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் வட மாநில தொழிலாளர்களுக்கு எதிராக இனவெறியை தூண்டும் வகையிலும், ஒரே இடத்தில் வேலை செய்யும் தமிழ்நாட்டு தொழிலாளர்களுக்கும், வடமாநில தொழிலாளர்களுக்கும் இடையே மோதல் போக்கை உருவாக்கும் வகையிலும் சீமான் மற்றும் சாட்டை துரைமுருகன் பேசி உள்ளனர். இது அவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.