தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பணி நிரவலின்போது இதையெல்லாம் உறுதிசெய்யுங்க? - ஆசிரியர் கூட்டமைப்பு

நடுநிலைப் பள்ளிகளில் பணிநிரவல் செய்யும்போது 6, 7, 8 வகுப்புகளுக்குக் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி மூன்று பட்டதாரி ஆசிரியர்கள் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

பணி நிரவலின் போது நடுநிலைப் பள்ளி
பணி நிரவலின் போது நடுநிலைப் பள்ளி

By

Published : Dec 20, 2021, 7:24 PM IST

சென்னை: பள்ளிக் கல்வித் துறை ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வு கோரிக்கை தொடர்பாக, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வினைச் சிறப்பாக நடத்தும் வகையில் வழிகாட்டும் நெறிமுறைகளை உள்ளடக்கி அரசாணை வெளியிட்டுள்ளீர்கள்.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சட்டப்பேரவை அறிவிப்பின்படி ஒளிவுமறைவற்ற வெளிப்படையான கலந்தாய்வினை விரைவில் நடத்திட வேண்டும். மாறுதல் கொள்கை விளக்க அரசாணையில் விடுபட்டவற்றைச் சரிசெய்ய வேண்டும்.

முதலமைச்சர் 110 விதியின்கீழ் சட்டப்பேரவை அறிவிப்பு செய்திக் குறிப்பில் ஜாக்டோ-ஜியோ போராட்ட காலங்களில் இடமாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்குக் கலந்தாய்வில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் இடமாறுதல் உத்தரவுகள் முழுமையாக ரத்துசெய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர்கள்

ஆனால், வழிகாட்டு முறைகளை உள்ளடக்கி வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் இது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளாக ஜாக்டோ-ஜியோ போராட்ட நடவடிக்கையில் ஈடுபட்டதற்காகப் பழிவாங்கும் நடவடிக்கையில் முறையில் வழங்கப்பட்ட இடமாறுதல் உத்தரவுகளை முழுமையாக ரத்துசெய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மேலும், மலை சுழற்சிக்கான அரசாணைகள் ரத்துசெய்யப்பட்டத்தை முழுமையாக வரவேற்கிறோம். முன்னுரிமை ஒன்றியங்களை அறிமுகம் செய்யும் நிலையில் ஏற்கனவே இரண்டு ஆண்டுகளாக கலந்தாய்வு நடத்தப்படாததால் பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களைக் கவனத்தில்கொள்ள வேண்டும்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஒன்றியத்தில் மலை சுழற்சி அரசாணை நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சத்தியமங்கலம் ஒன்றியத்தில் மலை சுழற்சி கலந்தாய்வில் நடைபெற்ற பாதிப்புகளைப் பல முறை அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறோம்.

பள்ளிக் கல்வித் துறை

எனவே இந்தமுறை அனைத்துப் பணியிடங்களையும் காலி பணியிடமாக அறிவித்து தற்போது பணியாற்றும் ஒன்றியத்தில் பணியில் சேர்ந்த முன்னுரிமை அடிப்படையில் (தற்போதைய பள்ளியில் சேர்ந்த முன்னுரிமை கணக்கில் கொள்ளாமல்) பணியிடங்களை நிரப்பவும் ஒன்றியம் விட்டு ஒன்றியம், மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் செல்லும் ஆசிரியர்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் கலந்தாய்வு நடத்த வேண்டும்.

நடுநிலைப்பள்ளிகளில் பணிநிரவல் செய்யும்போது 6, 7, 8 வகுப்புகளுக்குக் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி மூன்று பட்டதாரி ஆசிரியர்கள் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். அனைத்து மாற்றுத் திறனாளிகளையும் உள்ளடக்கி அனைவரும் பயன்பெறும் வகையில் திருத்தங்கள் செய்திட வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:கிராமப்புறங்களுக்குச் சென்று சேவையாற்றுகள் - ஸ்டாலின் கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details