தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பேருந்து நிலையங்களை சுத்தமாக வைக்கக்கோரிய வழக்கு: வருவாய்த் துறை ஒரு வாரத்திற்குள் பதில் அறிக்கை!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள பேருந்து நிலையங்கள் சுத்தமாக இருப்பதை உறுதி செய்யக் கோரிய வழக்கில் மாவட்ட ஆட்சியர்களிடம் பதில் பெற்று ஒருவாரத்தில் பதில் அறிக்கை தாக்கல் செய்வதாக வருவாய் நிர்வாகத் துறை முதன்மைச் செயலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

hc

By

Published : Oct 21, 2019, 10:32 PM IST

சேலம் மாவட்டம் கண்ணங்குறிச்சியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், "தமிழ்நாடு முழுவதுமுள்ள பேருந்து நிலையங்கள் சுகாதாரச் சீர்கேடுடன் இருப்பதாகவும் பேருந்து நிலையங்களை ஆக்கிரமித்து கடைகள் நடத்தப்படுவதால்தான் இந்தச் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது.

இந்திய அரசியல் சாசனத்தின் 21ஆவது பிரிவு, வாழ்வுரிமையை வழங்கியுள்ளது. அதில் சுகாதாரமான சூழ்நிலையை அனுபவிப்பதும் அடங்கும். மாநிலம் முழுவதும் உள்ள பேருந்து நிலையங்களை சுத்தமாக பராமரிக்க வலியுறுத்தி அலுவலர்களுக்கு 2015இல் மனு அளித்தும் எந்தப் பதிலும் இல்லை. தெருக்களையும் பொது இடங்களையும் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும் என தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டப் பிரிவுகளை அலுவலர்கள் அமல்படுத்தவில்லை" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இது குறித்து பதிலளிக்கும்படி, தமிழ்நாடு வருவாய்த் துறை, உள் துறை, போக்குவரத்துத் துறை, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சித் துறை, சுகாதாரத் துறை செயலர்களுக்கும் காவல் தலைமை இயக்குநருக்கும் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் இந்த வழக்கு இன்று நீதிபதி சத்தியநாராயணன், சேஷசாயி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக வருவாய் நிர்வாகத் துறை முதன்மைச் செயலர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார்.

அதில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதில் ஒவ்வொரு துறை சார்ந்த மேற்கொள்ளப்பட்ட ஆய்வு, நடவடிக்கை குறித்தும் விரிவான அறிக்கையையும் அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் ஒரு வார காலத்திற்குள் அறிக்கை அளிக்கும்படி வலியுறுத்தியதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்த அறிக்கையைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை வரும் நவம்பர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க:காணாமல் போன சிறுவன் வழக்கை டிஎஸ்பி விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

​​​​​​​

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details