தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

யானைகள் வேட்டை, தந்தம் கடத்தலில் ஈடுபட்ட முக்கிய நபர் கைது - சிபிஐ அறிக்கை தாக்கல் - main culprit involved in elephant poaching and ivory smuggling arrest CBI submits report in madras high court

யானைகள் வேட்டை, தந்தம் கடத்தலில் ஈடுபட்ட முக்கிய நபர் அஜித் பிரைட் கைது செய்யப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ சிறப்பு குற்றப்பிரிவு கண்காணிப்பாளர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

யானைகள் வேட்டை, தந்தம் கடத்தலில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி கைது - சிபிஐ அறிக்கையில் சொல்வது என்ன ?
யானைகள் வேட்டை, தந்தம் கடத்தலில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி கைது - சிபிஐ அறிக்கையில் சொல்வது என்ன ?

By

Published : Jan 27, 2022, 9:14 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் யானைகள் வேட்டையாடப்படுவது தொடர்பான வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றக் கோரி கொடைக்கானலை சேர்ந்த மனோஜ் இமானுவேல், திருச்சியைச் சேர்ந்த நித்திய சவுமியா ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், தமிழ்நாட்டில் யானை இறப்பு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்குகள் நீதிபதிகள் பாரதிதாசன், சதீஷ்குமார் அமர்வில் மீண்டும் (ஜனவரி 12) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ரயிலில் யானைகள் அடிபட்டு இறப்பதைத் தடுப்பது தொடர்பாக ரயில்வே அலுவலர்கள் இந்த வாரம் ஆலோசனை நடத்த இருப்பதால், இது சம்பந்தமாக அடுத்த விசாரணையின்போது அறிக்கைத் தாக்கல் செய்யப்படும் என ரயில்வே துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

யானைகள் வேட்டை, தந்தம் கடத்தல் வழக்கு

உத்தரவு

இதையடுத்து நீதிபதிகள், "யானைகள் வேட்டையாடப்படுவது தொடர்பான வழக்குகளை விசாரிக்கும்படி கடந்த ஆண்டு உத்தரவிட்டும், விசாரணையில் எந்த முன்னேற்றத்தையும் காட்டவில்லை. விசாரணையில் உள்ள தாமதம் குறித்து காணொலி காட்சி விசாரணையில் ஆஜராகி சிபிஐ எஸ்பி விளக்கமளிக்க வேண்டும்.

யானைகளை வேட்டையாடி திருடப்பட்ட ஒரு தந்தத்தைக்கூட பறிமுதல் செய்ய முடியவில்லை. இப்படியே சென்றால் நீதிமன்றமே சிறப்பு புலன் விசாரணைக் குழுவை நியமித்து, யானைகள் வேட்டை தொடர்பான வழக்குகளின் விசாரணையை மாற்ற வேண்டி வரும்” என தெரிவித்தனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை

சிபிஐ தரப்பில் ஆஜரான மதுரை கிளை உதவி சொலிசிஸ்ட்டர் ஜெனரல், இதுவரை எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி சிபிஐ அலுவலர்களை அறிவுறுத்துவதாக தெரிவித்தார். இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜனவரி 21ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

அறிக்கை தாக்கல்

இந்த வழக்குகள் நேற்று (ஜனவரி 26) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது சிபிஐ சிறப்பு குற்றப் பிரிவு (எஸ்சிபி) கண்காணிப்பாளர் காணொலி காட்சி வாயிலாக ஆஜராகி, விரிவான அறிக்கை தாக்கல் செய்தார்.

யானைகள் வேட்டை, தந்தம் கடத்தல் வழக்கு

முக்கிய நபர் கைது

அதில், நீதிமன்றத்தின் வழிகாட்டுதலைத் தொடர்ந்து, யானைகள் வேட்டை மற்றும் தந்தம் கடத்தலில் ஈடுபட்ட முக்கிய நபர் அஜித் பிரைட் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது அவரிடம், யானை வேட்டையாடுதல் மற்றும் தந்தம் கடத்தல் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழைய வழக்குகளில் கைப்பற்றப்பட்ட தந்தங்களை அடையாளம் காண்பதில் சிரமமாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க :ஓய்வு பெற்றது ஜனாதிபதி மெய்க்காப்பாளரின் குதிரை

ABOUT THE AUTHOR

...view details