சென்னை:சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் சிகிச்சைப்பெற்று குணமடைந்த மகேந்திரன் - தீபா ஆகியோருக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் திருமணம் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் மேடையில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், 'தினந்தோறும் ஆறேழு திருமணங்களுக்குச்செல்வேன். ஆனால், இதுவரை மிகவும் மகிழ்வுடன் கலந்துகொண்ட திருமணம் ஜிப்ஸி இன நரிக்குறவ மக்களின் திருமண நிகழ்வாகும். அதற்கடுத்து இந்த கல்யாணம் தான்.
இந்த திருமணத்தில் நான் கலந்து கொண்டது என் வாழ்நாளின் அரும் பேறுகளில் ஒன்று. திருமண விதிமுறைகள் அனைத்தும் பின்பற்றி திருமணம் நடைபெற்றுள்ளது. மேலும், அழையா விருந்தாளியாக இந்த திருமணத்திற்கு நான் வந்து இருக்கிறேன்.
நிதி நிலை அறிக்கையில் இருந்து 40 கோடி இந்த மருத்துவமனையின் கட்டமைப்புப் பணிக்காக ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மருத்துவமனையில் காலியாக உள்ள இடங்களில் விவசாயம் செய்யப்பட்டு, காய்கறிகள் இங்குள்ள தோழர்களுக்கு வழங்கப்படுகிறது. பேக்கரி ஒன்றும் செயல்பட்டு வருகிறது. அதேபோல தற்பொழுது இங்கு காலியாக இருக்கக்கூடிய இடங்களில், நெல் பயிரிட்டு உள்ளதாக மருத்துவமனையின் முதல்வர் தெரிவித்துள்ளார்.
திருமணம் நடைபெற்ற மகேந்திரன் மற்றும் தீபா இரண்டு பேரும் பட்டதாரிகள். அதனால், அவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித்தர வேண்டும் என்று சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றி அழகன் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் கீழ்பாக்கம் மனநல மருத்துவமனையிலேயே அவர்கள் இரண்டு பேருக்கும் வார்டு மேற்பார்வையாளராக பணி வழங்கப்படுகிறது' எனக் கூறினார்.