சென்னை:கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு உரிமைத் தொகை வழங்கும் விழா சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், இதர மாவட்டங்களில் அமைச்சர்கள் தலைமையில் இன்று (நவ.10) நடைபெறுகிறது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழக அரசு மகளிர் உரிமைத் தொகை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், குடும்பத்திற்காக வாழ்நாள் முழுவதும் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், அவர்களுக்கு ஆண்டிற்கு ரூபாய் 12 ஆயிரம் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டமானது பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் அவர்கள் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் உயரிய நோக்கம் கொண்டது. தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளின் விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமினை, முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த ஜூலை 27ஆம் தேதி அன்று தொடங்கி வைத்தார்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் இணைந்து கொள்ள 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் அரசுக்கு வரப் பெற்ற நிலையில், அவற்றில் தகுதியுள்ள 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டது. தமிழ்நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை, அண்ணா பிறந்தநாளான 15.9.2023 அன்று காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் மகளிர், மாதந்தோறும் ரூ.1000 பெற்று பயன் பெறும் வகையில் தொடங்கி வைத்தார்.
மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், முகாம்களில் விண்ணப்பித்து கள ஆய்வு நிலுவையில் இருந்த விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டு, தற்போது புதிதாக கண்டறியப்பட்டுள்ள 7 லட்சத்து 35 ஆயிரம் பயனாளிகளுக்கும், ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுடன் சேர்த்து, மொத்தம் 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 மகளிருக்கு, நவம்பர் மாதத்திற்கான உதவித் தொகையினை இன்று வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இத்திட்டத்தில் தற்போது இணைந்துள்ள 7 லட்சத்து 35 ஆயிரம் மகளிர் உள்ளிட்ட பயனாளிகளுக்கு உரிமைத் தொகை வழங்கிடும் விழா, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், இன்று காலை 10.30 மணியளவில் சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க:பெரியார் சிலை பற்றி பேச அண்ணாமலைக்கு எந்த அருகதையும் இல்லை - அமைச்சர் பொன்முடி!