சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலின் போது குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் 'உரிமைத்தொகை வழங்கும் திட்டம்' செயல்படுத்தப்படும் என்று திமுக சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த திட்டமானது வரும் செப்.15 ஆம் தேதி அண்ணா பிறந்த தினத்தில் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதையடுத்து, உரிமைத்தொகை பெறும் பயனாளிகளுக்கான தகுதிகள், நிபந்தனைகள் வெளியிடப்பட்டன. இதைத்தொடர்ந்து, நியாயவிலை கடைகள் மூலம் விண்ணப்பம் அளித்து, இரண்டு கட்ட விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடத்த முடிவெடுக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 24) தருமபுரி மாவட்டம் தொப்பூரில் உள்ள அரசுப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை (kalaignar Magalir urimai thittam) திட்ட விண்ணப்பங்கள் பதிவைத் தொடங்கிவைத்தார்.
இதனைத்தொடர்ந்து, இன்று (ஜூலை 24) தமிழ்நாடு முழுவதும் இத்திட்டத்தின் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகின்றன. மேலும், சென்னையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கான விண்ணப்பங்கள் முதற்கட்டமாக 98 ஆவது வார்டுகளில் விண்ணப்பப் பதிவு பணி தொடங்கியது. மேலும், சென்னை மாநகராட்சி பகுதியில் இந்த முகாமானது இரண்டு கட்டங்களாக நடைபெறும்.
பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் முதற்கட்டமாக இன்று (ஜூலை 24) முதல் ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி வரை 98 ஆவது வார்டுகளில் உள்ள 703 நியாவிலை கடைகளில் இதற்கான சிறப்பு முகாம் நடைபெறும். இந்த முகாம்கள் வாரத்தில் 7 நாள்களும் காலை 7 மணி முதல் மதியம் 1 வரையிலும், மதியம் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் நடைபெறும்.