தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தாயையும் அக்காவையும் இழந்த இவாஞ்சலினுக்கு முதலமைச்சர் உதவ வேண்டும் - ஸ்டாலின் - முதலமைச்சர் முழுமையாக உதவ வேண்டும்

சென்னை: உயிர்ப்பலி வாங்கும் சென்னை - மதுரவாயல் பைபாஸ் மழைநீர் வடிகால் கால்வாய்களை மூடும் திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும்; விபத்தில் தாயையும், அக்காளையும் பறிகொடுத்த இவாஞ்சலினுக்கு முழுமையாக உதவிட முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

mk stalin
mk stalin

By

Published : Dec 8, 2020, 2:23 PM IST

Updated : Dec 8, 2020, 2:55 PM IST

சென்னை தாம்பரம் புறவழிச்சாலையில் தனது மகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற மருத்துவப் போரசிரியையின் வாகனம் சாலையில் சறுக்கி விழுந்ததில், மூடப்படாத மழைநீர் வடிகாலில் விழுந்த அவரும், அவரது மகளும் உயிரிழந்தனர்.

இந்நிலையில், இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னையில் பெய்த கனமழையின் போது இரும்புலியூர் மதுரவாயல் பைபாஸ் சாலையில் இருந்த இந்த மழைநீர் வடிகால் கால்வாய் அந்தத் தாய்க்கும் மகளுக்கும் மரணக் குழியாக மாறியிருப்பதற்கு மத்திய மாநில அரசுகளின் அலட்சியமே காரணமாகும்.

திறந்தவெளி மழைநீர் வடிகால் கால்வாய்களை மூடி மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்திட 2018 ஆம் ஆண்டிலேயே போடப்பட்ட திட்டத்திற்குத் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையரகம் அனுமதி அளிக்கவில்லை. மத்திய அரசிடம் அதிமுக அரசும் வலியுறுத்தி இத்திட்டத்தை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இரு அரசுகளின் தோல்வியினால், ஏற்கனவே தந்தையை இழந்த துயரத்தில் இருந்த குடும்பத்தில் தாயும், மகளும் அரசின் அலட்சியத்திற்குப் பலியாகியுள்ளார்கள்.

தாயையும் அக்காளையும் இழந்துள்ள இவாஞ்சலினுக்கு பெயரளவுக்கு நிதியுதவி மற்றும் இழப்பீடு வழங்குவதற்குப் பதிலாக- அவரை முழுமையாகக் காப்பாற்றிட அதிமுக அரசு போதிய நிதியுதவி செய்ய முன்வர வேண்டுமென்றும், அந்தப் பைபாஸ் சாலையில் உள்ள மழைநீர் வடிகால் கால்வாய்களை மூடும் 16 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டத்தினை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும் என்றும் மத்திய மாநில அரசுகளைக் கேட்டுக்கொள்கிறேன்.

உயிர்ப்பலி வாங்கும் சென்னை - மதுரவாயல் புறவழிச்சாலை மழைநீர் வடிகால் கால்வாய்களை மூடும் திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும்; விபத்தில் தாயையும், அக்காளையும் பறிகொடுத்த இவாஞ்சலினுக்கு முழுமையாக உதவிட முதலமைச்சர் திரு. பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க:ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட்டுக்கு பூட்டு: காங்கிரஸார் கைது!

Last Updated : Dec 8, 2020, 2:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details