தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை கிரானைட் முறைகேட்டில் சகாயம் கணக்கு தவறா? - குவாரி உரிமையாளர்கள் புகார்

சென்னை: மத்திய அரசின் புள்ளிவிவரங்களின்படி, மதுரையிலிருந்து 1996ஆம் ஆண்டு முதல் 2013 வரை 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள நிலையில், 1.1 லட்சம் கோடி ரூபாய்க்கு எப்படி முறைகேடு நடைபெறும் என குவாரி உரிமையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

quarry owners
quarry owners

By

Published : Nov 23, 2020, 8:09 PM IST

2012ஆம் ஆண்டு தமிழ்நாட்டையே உலுக்கியது மதுரை மாவட்ட கிரானைட் முறைகேடு விவகாரம். அப்போதைய ஆட்சியராக இருந்த சகாயம், கிரானைட் குவாரிகளில் முறைகேடு நடப்பதாகவும், இதில் 16 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடப்பதாகவும் அறிக்கைச் சமர்ப்பித்தார்.

தொடர்ந்து, கிரானைட் அதிபர் வீடுகளிலும், அலுவலகங்களிலும் காவல் துறையினர் சோதனை நடத்தி சிலரை கைதுசெய்தது. மாவட்ட புவியியல் மற்றும் சுரங்க அலுவலங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையும் சோதனை நடத்தியது.

இந்த முறைகேட்டில் தொடர்புடைய அரசுத் துறை அலுவலர்கள் கைதுசெய்யப்பட்டனர். தமிழ்நாட்டிலுள்ள கிரானைட் முறைகேடுகளை விசாரணை செய்யும் சிறப்பு அலுவலராக 2014ஆம் ஆண்டு சகாயம் சென்னை உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டார்.

இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி சகாயம் குழு நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில், கிரானைட் குவாரிகளில் 1.1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முறைகேடு நடைபெற்றதாகக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், இது குறித்து மதுரை கிரானைட் குவாரி சங்கத் தலைவர் ராஜசேகரன் கூறுகையில், "குவாரிகளுக்கு வெளியே உள்ள கற்களைச் சேர்த்தால் கணக்குச் சரியாக வரும். குவாரிகளுக்கு வெளியே வைக்கப்பட்டுள்ள கற்களுக்கு தனி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களின் கூற்றுப்படி, 4 குவாரிகள் 5 ஹேக்டேக்கரில்தான் விதிமீறல் நடைபெற்றுள்ளது, ஆனால் 11 ஆயிரம் கோடிகளில் இழப்பீடு ஏற்படுத்தியுள்ளதாக கூறுகின்றனர்.

முதலில் 11 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு என்றார்கள், பின்னர் 16 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டதாகக் கூறினார்கள். நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சகாயம் குழு சட்டவிரோத கிரானைட் முறைகேடால் அரசுக்கு 1.1 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகக் கூறியிருக்கிறது. கிரானைட் முறைகேடு பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய மற்றொரு விஷயம், அவற்றை கப்பல் மூலமாகத்தான் வெளிநாட்டுக்கு கொண்டுசெல்ல முடியும்.

அப்போது முறையாக எடைபோட்டுச் செல்ல முடியும். அப்படி இருக்கையில் எப்படி முறைகேடாக ஏற்றுமதி செய்ய முடியும். உள்நாட்டு தேவைக்கும் டிரைலர் லாரியில்தான் ஏற்றிச் செல்ல முடியும். இதனை பல மாவட்ட ஆட்சியர்கள், வருவாய்த் துறை அலுவலர்களை மீறி எப்படி கொண்டுசெல்ல முடியும்.

மத்திய அரசின் வர்த்தகத் துறையின் புள்ளிவிவரங்களின்படி, 1996ஆம் ஆண்டிலிருந்து 2013 வரை இந்தியாவிலிருந்து 52 ஆயிரத்து 324 கோடி ரூபாய் மதிப்பிலான கிரானைட் பொருள்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இதில் தமிழ்நாட்டின் பங்கான 13 விழுக்காடு வெறும் ஆறாயிரத்து 808 கோடி ரூபாய். மதுரை மாவட்ட கிரானைட் ஏற்றுமதி இரண்டாயிரத்து 798 கோடி ரூபாயாக உள்ளது.

ஏற்றுமதி தவிர உள்நாட்டுத் தேவைக்கு 10 விழுக்காடு என்பது அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவு. மதுரையிலிருந்து 1996ஆம் ஆண்டுமுதல் 2013 வரை 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மட்டுமே கிரானைட் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள நிலையில், 1.1 லட்சம் கோடி ரூபாய்க்கு எப்படி முறைகேடு நடைபெறும்" என கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க:2ஜி வழக்கு: கனிமொழி, ஆ. ராசா மனுக்களை தள்ளுபடி செய்த டெல்லி உயர் நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details