சென்னை:சிந்து முதல் வைகை வரை செழித்தோங்கிய தமிழர் நாகரிகத்திற்கான உலகத் தரத்திலான அருங்காட்சியகத்தினை 400 கோடி ரூபாய் செலவில், தற்போது மதுரை மத்திய சிறைச்சாலை இருக்கும் இடத்தில் அமைத்திட வேண்டும் என்றும், அதற்கு உலக அளவிலான வல்லுநர் குழு அமைக்கப்பட வேண்டும் என்றும், மதுரை எய்ம்ஸ், மதுரை நைபர், மதுரை பன்னாட்டு விமான நிலைய கோரிக்கைகளில் தொடர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதை உறுதிசெய்ய வேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் சு. வெங்கடேசன் சந்தித்து மனு அளித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று, மு.க. ஸ்டாலினை சு. வெங்கடேசன் சந்தித்து மதுரையின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த 32 கோரிக்கைகள் அடங்கிய மனுவினை வழங்கினார். இந்தச் சந்திப்பின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், புறநகர் மாவட்டச் செயலாளர் கே. ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
32 கோரிக்கைகள்
பின்னர் செய்தியாளரிடம் பேசிய வெங்கடேசன்,
”* மதுரை மாவட்டத்தில் நான்கு புதிய தொழிற்பேட்டைகளை உருவாக்க வேண்டும். மேலூர் பகுதி, தொழிற்பேட்டைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
* மதுரைக்கான மாஸ்டர் பிளானில் புதிய தொழிற்சாலைகளுக்கு 10 விழுக்காடு இடங்களை வகைப்படுத்த வேண்டும்.
* மதுரை - தூத்துக்குடி தொழில் பெருவழித் திட்டத்தைச் சிறப்புடன் செயல்படுத்த தனி ஐஏஎஸ் அலுவலரை நியமிக்க வேண்டும்.
* மதுரையில் புதிய நவீன தகவல் தொடர்பு தொழில்நுட்பப் பூங்காவினை உருவாக்க வேண்டும்.
* மதுரையில் ஜவுளித் தொழிலை மேம்படுத்த ஜவுளிக்கென தனியாக வாரச் சந்தையினை உருவாக்க வேண்டும்.
* சுங்கடிச் சேலைகளுக்கான சிறப்புச் சந்தையினை ஏற்படுத்த வேண்டும்.
* உயிரியல் துறையில் சிறு-குறு தொழில்களை ஊக்குவிக்க காமராசர் பல்கலைக்கழகத்தில் டைசல் பூங்காவினை உருவாக்க வேண்டும்.
* மதுரையின் மையத்தில் இருக்கும் மத்திய சிறைச் சாலையினை உடனடியாக புறநகர் பகுதிக்கு மாற்றிட வேண்டும்.
* சிந்து முதல் வைகை வரை செழித்தோங்கிய தமிழர் நாகரிகத்திற்கான உலகத் தரத்திலான அருங்காட்சியகத்தினை 400 கோடி ரூபாய் செலவில், தற்போது மதுரை மத்திய சிறைச்சாலை இருக்கும் இடத்தில் அமைத்திட வேண்டும். அதற்கு உலக அளவிலான வல்லுநர் குழு அமைக்கப்பட வேண்டும்.
* பாத்திமா கல்லூரி முதல் கன்னியாகுமரி நெடுஞ்சாலை சந்திப்பு வரை வைகையின் வடக்கு நதிக்கரை சாலையை விரிவுப்படுத்த வேண்டும்.
* காளவாசலிலிருந்து கன்னியாகுமரி செல்லும் மேலக்கால் சாலையை விரிவுபடுத்த வேண்டும்.
* விரகனூர் சந்திப்பு, மண்டேலாநகர் சந்திப்பு, மேலமடை, அரசு இராசாசி மருத்துவமனை, மாட்டுத்தாவணி, தெற்குவாசல், கோரிப்பாளையம் ஆகிய இடங்களில் புதிய மேம்பாலங்களை அமைக்க வேண்டும்.
* பழுதான நிலையில் உள்ள மேயர் முத்து பாலத்தைச் சீரமைக்க வேண்டும். பழங்காநத்தம் வ.உ.சி. பாலத்தினை விரிவுபடுத்தி புதுப்பிக்க வேண்டும்.
* மதுரை மாவட்ட விரைவுப் போக்குவரத்து ஏற்பாட்டிற்கு மதுரை மெட்ரோவிற்கான சாத்தியக்கூறு விரைந்து செய்யப்பட வேண்டும்.
* வைகை நதியினைப் பாதுகாக்க ஐந்து மாவட்ட நிர்வாக தலையீடுகளை மாற்றி ஒற்றை நிர்வாக அலகின்கீழ் கொண்டுவருகிற புதிய வைகை நிர்வாக அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.
* மதுரை மாநகராட்சியின் விரிவாக்கப்பட்ட வார்டுகளில் பாதாள சாக்கடைத் திட்டத்தினை மேற்கொள்ள வேண்டும்.