தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 3, 2021, 3:50 PM IST

ETV Bharat / state

மதுரை மீனாட்சியம்மன் கோயில் நுழைவாயில் ஓராண்டுக்குள் சீரமைப்பு

2018ஆம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தினால் சேதமடைந்த மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் நுழைவாயில் ஓராண்டுக்குள் சீரமைக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

நுழைவாயில்
நுழைவாயில்

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைத்த திமுக அரசு, கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி திருத்திய வரவு-செலவு அறிக்கையினைத் தாக்கல்செய்தது.

வருகின்ற செப்டம்பர் 21ஆம் தேதிவரை நடைபெற உள்ள நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரில், பல்வேறு துறைகளில் அறிவிக்கப்பட்ட மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றுவருகிறது.

கேள்வி எழுப்பிய ஆர்.பி. உதயகுமார்

இந்நிலையில் இன்று (செப்டம்பர் 3) சட்டப்பேரவை கேள்வி நேரத்தின்போது, திருமங்கலம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.பி. உதயகுமார் துணைக்கேள்வி எழுப்பினார். கேள்விக்கு சேகர்பாபு பதிலளித்துப் பேசினார்.

அப்போது நடைபெற்ற உரையாடல் பின்வருமாறு:

ஆர்.பி. உதயகுமார்: கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், உலகப் பிரசித்திப்பெற்ற மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் தீ விபத்து நடைபெற்றது. பின்னர் அதனைச் சீரமைக்க குழு அமைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து நுழைவாயிலைச் சீரமைக்க முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், தற்போது அந்தப் பணிகள் எந்த நிலையில் உள்ளன?

சேகர்பாபு: தீ விபத்து ஏற்பட்ட 2018ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட குழு தனது முதல் கூட்டத்தை மட்டுமே நடத்தியுள்ளது. அதன் பின்னர் மூன்று ஆண்டுகளாக, அந்தக் குழுவானது ஆலோசனை மேற்கொள்ளவில்லை.

எனினும் முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, தீ விபத்து ஏற்பட்ட வீரராகவர் நுழைவாயிலை, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் ஆய்வுசெய்தனர். அடுத்த ஒரு ஆண்டுக்குள் நுழைவாயில் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடையும்.

இவ்வாறாக உரையாடல் நடைபெற்றது.

இதையும் படிங்க: மெய்நிகர் மாரத்தானில் 19,596 பேர் பங்கேற்பு: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

ABOUT THE AUTHOR

...view details