சென்னை:தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் செந்தில், மாநில பொதுச் செயலாளர் ரவி சங்கர், தமிழ்நாடு முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ” மதுரை மருத்துவக் கல்லூரியில் ஏப்ரல் 30ஆம் தேதி முதலாம் ஆண்டு மாணவர்கள் உறுதிமொழி ஏற்கும் விழாவில் தேசிய மருத்துவ ஆணையம் வழங்கிய ’மகரிஷி சரக் சபதத்தின்படி’ மருத்துவ மாணவர்கள் உறுதிமொழியை ஏற்றுள்ளனர். இதற்காக மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேல் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து காத்திருப்போர் பட்டியலில் வைத்திருக்கிறது.
தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சபதம் என்னும் உறுதிமொழியை தேசிய மருத்துவ ஆணையம் கொண்டு வந்தவுடனேயே எதிர்த்தது. மகரிஷி சரக் சபதம் மூலம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களை மேன்மைப்படுத்திக் கூறியது, பசுக்களை மேன்மைப்படுத்திக் கூறியது, ஆண் - பெண் நோயாளிகளைக் கூறி அவர்களுக்கு சிகிச்சை அளிக்க நிபந்தனைகள் விதித்தது, மகரிஷி சரக் நவீன மருத்துவத்தைப் பயன்படுத்தாதவர் என்பது தெரியும். எனவே, உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வரும் ஹிப்போகிரெடீஸ் உறுதி மொழியை இந்தியாவிலும் பயன்படுத்த வேண்டும் என்ற காரணங்களால் எதிர்ப்புத்தெரிவித்தோம்.
தேசிய மருத்துவ ஆணையம் எம்பிபிஎஸ் சேர்க்கை குறித்து கூட்டத்தில் பிப்ரவரி மாதம் ஏழாம் தேதி அதன் தலைவர் அருண் அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கும் அறிவுரை வழங்கினார். இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வைட் கோட் செர்மனி, இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தவும் உத்தரவிடப்பட்டது. இதுவரை இதுபோன்ற விழாக்கள் தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் நடைபெற்றது இல்லை. அந்த விழாவில் சரக் உறுதிமொழியை அனைத்து மருத்துவ மாணவர்களுக்கும் பிரமாணம் செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
மேலும், முதலாமாண்டு மருத்துவ மாணவர்கள் சேர்க்கை குறித்து பல்வேறு உத்தரவுகளையும் அறிவுறுத்தல்களையும் வழங்கினார். மேலும் தேசிய மருத்துவமனையில் இருந்து அனைத்து மருத்துவ கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கையும் வழங்கப்பட்டது. இதுகுறித்து மத்திய அரசும் தமிழ்நாடு அரசும் எந்தவித சுற்றறிக்கையும் அனுப்பாத நிலையில் தமிழ்நாட்டில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதல்வர்கள் இம்மாணவர்கள் உறுதி அளிப்பு விழா நிகழ்ச்சியை நடத்தினர்.