தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மதுரை காமராசர் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையில் மோசடி!'

சென்னை:  மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் பல்வேறு முதுநிலைப் பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கையில் மோசடி நிகழ்ந்துள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

vaiko

By

Published : Jun 16, 2019, 12:24 PM IST

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில், பல்வேறு முதுநிலைப் பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை அறிவிப்பு, பிப்ரவரி முதல் வாரம் வெளியிடப்பட்டது.

இந்த அறிவிப்பில், தேசிய அளவிலான முதுநிலைப்படிப்புகள், நுழைவுத்தேர்வு அடிப்படையிலான முதுநிலை பட்டப்படிப்புகள் வகை 1, நுழைவுத் தேர்வு இன்றி, இளநிலை பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையிலான முதுநிலை பட்டப்படிப்புகள் வகை 2, ஐந்து ஆண்டுகள் ஒருங்கிணைந்த முதுநிலை பட்டப்படிப்பு என முதுநிலைப் பட்டப் படிப்புகள் அனைத்தும் நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டு இருந்தன. இவை அனைத்திற்கும், இணைய வழியில்தான் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

முதல் இரண்டு பிரிவுகளுக்கும் விண்ணப்பிக்கக் கடைசி நாள் 8.3.2019. அதற்கான நுழைவுத்தேர்வு மார்ச் 23, 24 ஆகிய நாள்களில் நடைபெறும் என்றும்; மூன்றாவது பிரிவுக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள் 5.4.2019, நான்காவது பிரிவுக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள் 31.5.2019 என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் பட்டியல், 19.3.2019 அன்று பல்கலைக்கழக இணையத்தில் வெளியிடப்பட்டது. அதே நாளில், நுழைவுத் தேர்வு எழுதுவதற்கான அனுமதிச் சீட்டுகளும் தரப்பட்டன. 2019, மார்ச் 24ஆம் தேதி மதுரையில் மட்டும் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து மட்டும் அன்றி, புதுச்சேரி, கேரளாவில் இருந்தும் மாணவர்கள் மதுரைக்கு வந்து தேர்வு எழுதினர். ஆனால், முடிவுகள் எதையும் வெளியிடவே இல்லை. மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களும் வெளியிடப்படவில்லை. மாணவர்களுக்கும் எந்தத் தகவலும் அனுப்பவில்லை.

நுழைவுத் தேர்வு இல்லாத பிரிவுகளுக்கும், அவர்கள் இளநிலை பட்டப்படிப்பில் பருவத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தரப்பட்டியல் எதுவும் வெளியிடவில்லை. ஆனால் அவர்களை, 13.5.2019 அன்று நடைபெற உள்ள கலந்தாய்வுக்கு வரும்படி, பல்கலைக் கழக நிர்வாகம் கடிதம் அனுப்பியது. நுழைவுத் தேர்வு எழுதிய சில மாணவர்களுக்கும் கடிதங்கள் அனுப்பியது.

இந்தக் கடிதங்கள் அனைத்தும், மே 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு மேல் சாதாரண அஞ்சலில் அனுப்பப்பட்டு இருக்கின்றன. பெரும்பாலான கடிதங்கள் மாணவர்களுக்குப் போய்ச் சேரவே இல்லை. எனவே, கலந்தாய்வில் குறைந்த அளவு மாணவர்களே கலந்துகொண்டனர். மற்ற இடங்கள் அனைத்தும் காலி இடங்கள் என மதியம் 2 மணிக்கே அறிவிப்பு வெளியிட்டு, பிற்பகல் 3 மணிக்கே, உடனடி மாணவர் சேர்க்கை என அறிவித்து, அவசர அவசரமாக மாணவர் சேர்க்கை நடத்தி முடித்துள்ளனர்.

அதேபோல, அறிவியல் முதுநிலை பட்டப்பிரிவுகளுக்கு, 25.5.2019 அன்று கலந்தாய்வு நடத்தினர். அதற்கான அறிவிப்பும் மூடு மந்திரம்தான். நுழைவுத் தேர்வு முடிவுகளை அறிவிக்காமலேயே, இதற்கும் உடனடி மாணவர் சேர்க்கை நடத்தி இருக்கின்றனர்.

ஆனால், பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பில், உடனடி மாணவர் சேர்க்கை குறித்து எந்தவிதமான அறிவிப்பும் கிடையாது. நாளிதழ்கள், ஊடகங்களில் எந்தவிதமான விளம்பரமும் செய்யவில்லை. கலந்தாய்வுக்கு முதல் நாள், பல்கலைக்கழக வாயிலில் ஒரு விளம்பரப் பதாகை மட்டுமே வைத்து இருந்தனர்.

நுழைவுத் தேர்வில் 50 மதிப்பெண்கள், இளநிலை பட்டப்படிப்பில் 50 மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு மட்டுமே இடம் என்ற அளவில் சேர்க்கை நடத்துகையில், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை அனைத்தும் மூடு மந்திரமாகவே நடத்தி முடிக்கப்பட்டு இருக்கின்றது.

இந்த நிலையில், மாணவர் சேர்க்கையில் தாங்கள் செய்த தவறுகளையும், முறைகேடுகளையும் மறைப்பதற்காக, மதுரை காமராசர் பல்கலைக்கழக வலைதளத்தில் வெளியிடப்பட்டு இருந்த மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்புகள், நுழைவுச் சீட்டு அறிவிப்புகள் அனைத்தையும் திடீரென நீக்கி விட்டனர். இது மாணவர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

எனவே, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் 2019-20 கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கையில் நடைபெற்றுள்ள மோசடி குறித்து தக்க விசாரணை நடத்த வேண்டும். முறைகேடான மாணவர் சேர்க்கையை ரத்து செய்து, தகுதி உடைய மாணவர்களுக்கு முதுநிலை பட்டப்படிப்புகளில் இடம் கிடைக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். முறைகேடு செய்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details