மதுரை :ராமேஸ்வரத்தைச் சேர்ந்த வில்லாயுதம், கடல் அட்டை கடத்திய வழக்கில் ஜெட்டி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இவர் இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தாலும், வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி இவ்வழக்கில் காவல்துறையினர் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்ய முடியாது.
வனத்துறை தான் விசாரித்துக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியும். பல மாதங்களாகியும் காவல்துறையினர் வனத்துறைக்கு இந்த வழக்கை மாற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. வருங்காலங்களில் இதுபோன்ற தாமதம் ஏற்படக்கூடாது.
விவசாய நிலத்தை மண்புழுக்கள் பாதுகாப்பதைப் போல, கடல் வளத்தைக் கடல் அட்டைகள் பாதுகாக்கின்றன. எனவே, கடல் அட்டைகளைப் பாதுகாக்க வேண்டியது அவசியம்.
மீன் பிடிக்கும்போது வலையில் கடல் அட்டைகள் சிக்கியதாகக் கூறுவது தவறு. கடலின் அடி மட்டத்தில் தான் அட்டைகள் வாழும். அடி ஆழத்தில் சுரண்டினால் தான் அட்டைகளை வெளியே எடுக்க முடியும். அதற்கு மருத்துவ குணமுள்ளது. அட்டைகளை அளித்தால் கடல்வளம் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது எனக் கூறி வில்லாயுதம் பிணை மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க : ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ கடல் மீன்கள்