சென்னை: மதுரை மாவட்ட பாஜக பொறுப்பாளராக பதவி வகித்து வந்த மருத்துவர் சரவணன், கடந்த ஆகஸ்ட் மாதம் மதுரை விமான நிலையத்தில் நிகழ்ந்த பாஜக - திமுகவினர் மோதல் தொடர்பான விவகாரத்தில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக பாஜகவில் இருந்து விலகினார்.
அதனைத் தொடர்ந்து நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை, அவரது இல்லத்தில் சந்தித்து பேசிய சரவணன், திமுகவில் இணையப்போவதாக தகவல் வெளியானது. அது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூட தாய் கழகத்தில் இணைவதில் என்ன தவறு என கருத்து தெரிவித்திருந்தார்.
இதனிடையே, திமுகவில் சீட்டு கிடைக்காததால் விலகிச் சென்று, திமுகவுக்கு எதிராக திவீர அரசியல் செய்த சரவணனை மீண்டும் கழகத்தில் இணைக்கக் கூடாது என திமுக நிர்வாகிகள் பலரும் தலைமைக்கு புகார் கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால், மீண்டும் பாஜகவில் இணைய சரவணன் முடிவெடுத்ததாகவும் அதனை அண்ணாமலை தரப்பு தவிர்த்துவிட்டதாகவும் தமிழ்நாடு அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.
இப்படிப்பட்ட அரசியல் சூழலில் யாரும் எதிர்பாராதவிதமாக இன்று காலை சென்னையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசிய மருத்துவர் சரவணன், தன்னை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைத்துக்கொண்டார்.