சென்னை: சென்னை, இந்துஸ்தான் பல்கலைக்கழகத்தில் மார்ச் 21 முதல் 24ஆம் வரை அகில இந்திய அளவிலான பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டிகள் நடைபெற்றன. இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'ஒவ்வொரு ஆண்டும் அகில இந்திய அளவிலான பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்திய அளவில் வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு என நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்திலிருந்தும் ஏறத்தாழ 75 அணிகள் என 300க்கும் மேற்பட்ட அணிகள் இப்போட்டிகளில் விளையாடி வருகின்றன. இந்த ஆண்டு நான்கு மண்டலங்களிலிருந்தும் 325க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றதில் 16 அணிகள் சென்னையில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டிக்குத் தேர்வுப் பெற்று கலந்துகொண்டது.
மேலும், சென்னையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் சென்னை பல்கலைகழகம் அணி (University of Madras) மற்றும் டெல்லி ஜாமியாமிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் (Jamiamillia Islamia University, Delhi) ஆகிய பல்கலைக்கழக அணிகள் விளையாடின. இப்போட்டியில் சென்னை பல்கலைக்கழக அணி 97-60 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. சென்னைப் பல்கலைக்கழக அணியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தங்கும் விடுதியில் இருந்து பயிற்சி பெற்று வருகின்ற 7 வீரர்கள் பங்கேற்றுச் சிறப்பாக விளையாடியது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சிறப்பு விளையாட்டு விடுதி (Sports Hostel of Excellency) 1997ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இவ்விடுதியில் தங்கிப் பயிற்சி பெறும் மாணவ, மாணவியர்கள் கூடைப்பந்து, கைப்பந்து, தடகளம், குத்துச் சண்டை, ஜூடோ உள்ளிட்ட விளையாட்டு பயிற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்' என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:நீலகிரி மலை ரயில் : முதல் முறையாக டீசல் என்ஜினில் இயக்கம்