சென்னை:பிபிசியின் குஜராத் மதக்கலவரம் 2002 குறித்த ஆவணப் படத்தை (BBC Documentary On 2002 Gujarat Riots) இன்று சென்னைப் பல்கலைக்கழகத்தின் இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் (ஜன.27) பார்வையிட்டனர். அப்படத்தை தமிழ்நாடு முழுவதும் திரையிட வேண்டும் என அம்மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் (Godhra train burning incident) குறித்து பிபிசி செய்தி நிறுவனம் இரண்டு பாகங்கள் அடங்கிய ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தது. மத்திய அரசின் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தால் இந்த ஆவணப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யவும் பொதுவெளிகளில் திரையிடுவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் 26ஆம் தேதி சென்னை மாநிலக் கல்லூரியின் விக்டோரியா விடுதியில் மாணவர்கள் ஆவணப்படத்தை பார்த்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இன்று சென்னை பல்கலைக்கழகத்தில் மாலை 3 மணிக்கு ஆவணப்படத்தை திரையிட இந்திய மாணவர் சங்கத்தின் ஏற்பாடு செய்திருந்தனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கௌரி, 'சென்னை பல்கலைக்கழகத்தில் எந்தவித ஆவணப்படத்தையும் வெளியிடுவதற்கு மாணவர்கள் தங்களிடம் அனுமதி பெறவில்லை. பிபிசி தயாரித்துள்ள ஆவணப் படத்தை வெளியிடுவது குறித்து அரசின் வழிகாட்டுதல்படி செயல்படுவோம்' என்று கூறினார்.
திரையிடப்பட்ட மோடி குறித்த ஆவணப்படம்: இந்த நிலையில், சென்னை பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் மற்றும் சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் நூற்றாண்டு விழா கலையரங்க கூட்டத்தின் வெளியே 10-க்கும் மேற்பட்டோர் சேர்ந்து இந்த ஆவணப்படத்தை லேப்டாப் மூலமாக இன்று (ஜன.27) பார்த்தனர். அப்போது சென்னை பல்கலைக்கழக பாதுகாப்பு காவல் அதிகாரி சந்திரமெளலி, மாணவர்களிடம் அங்கு இருந்து கலைந்து போக சொல்லியே அறிவுறுத்தினார்.