சென்னை:சென்னை பல்கலைக் கழகம் மிகவும் தொன்மை வாய்ந்தது. இதில் பல்வேறு முதுகலைப் பாடப்பிரிவுகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. சென்னை பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவர்கள் தங்களது உரிமைக்காகவும், சமூகம் சார்ந்த பிரச்சனைகளுக்காகவும் அடிக்கடி போராட்டங்களில் ஈடுபடுவார்கள்.
இந்த நிலையில், சென்னை பல்கலைக் கழகத்தில் எம்.ஏ. சமூகவியல் பாடப்பிரிவில் படிக்கும் மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபடக் கூடாது என அத்துறை தலைவர் அறிவுறுத்தியதாக தெரிகிறது. போராட்டங்களில் ஈடுபட மாட்டேன் எனவும், அரசியல் தொடர்பில் இருக்க மாட்டேன், துறைத் தலைவருக்கு தெரிவிக்காமல் விடுப்பு எடுத்தால் அதற்கான நடவடிக்கைக்கு கட்டுப்படுகிறேன் எனவும் உறுதி மொழி கூறி, அதில் மாணவர்களும், அவர்களது பெற்றோரும் கையொப்பம் இட வேண்டும் என சமூகவியல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கு மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் எனப் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, சென்னைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், "சென்னை பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையில் 2ஆம் ஆண்டு எம்.ஏ. படிக்கும் மாணவர்கள் உறுதி மொழிப் படிவத்தில் கையெழுத்துப் போட வேண்டும் என்ற அறிவிப்பு கவலை அளிப்பதாக உள்ளது. இந்த சுற்றறிக்கை உயர் கல்வியின் நோக்கத்தையே சிதைப்பதாக இருப்பதால், அதனைப் பல்கலைக் கழகத்தின் உள்விவகாரமாக பார்க்க முடியாது.
ஜனநாயகத்தின் அம்சங்களாக உள்ள விவாதம், விமர்சனம் இருக்க வேண்டும். அறிவுள்ள குடிமக்கள் இருந்தால் மட்டுமே ஜனநாயகம் பயனுள்ளதாக இருக்கும். இந்தியா என்பது இந்திய அரசியலமைப்பில் 'இறையாண்மை கொண்ட சோசலிச மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசு' என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பின் 19வது பிரிவின்படி, அனைத்து குடிமக்களுக்கும் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம், அமைதியான முறையில் ஆயுதங்கள் இல்லாமல் கூடுவது, சங்கங்கள் அல்லது தொழிற்சங்கங்களை உருவாக்குதல் ஆகியவற்றிற்கு உரிமை உண்டு. அரசமைப்புச் சட்டத்தின் 21வது பிரிவு கண்ணியமான வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கிறது.