சென்னை: திமுக தேர்தல் அறிக்கையில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் எனக் கூறப்பட்டிருந்த நிலையில், சென்னை பல்கலைக்கழகத்தில் அவுட்சோர்சிங் மூலம் தனியார் நிறுவனத்திலிருந்து 439 பணியாளர்களைத் தேர்வுசெய்வதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இதனால் படித்த இளைஞர்கள் மீண்டும் தனியார் நிறுவனத்தின்கீழ் பணியாற்றும் அவலநிலை தொடர்ந்து வருகிறது.
வேலைவாய்ப்பு
திமுகவின் தேர்தல் அறிக்கையில் அரசுத் துறைகளில் 5.50 லட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் எனவும், தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் மூன்று லட்சத்து 50 ஆயிரம் தமிழ்நாடு இளைஞர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டது.
அரசு வேலை
மேலும் குடும்பத்தில் முதல் தலைமுறைப் பட்டம் பெற்ற ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்.
தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சிசெய்த அதிமுக அரசின் தொலைநோக்குச் சிந்தனையில்லாமை, நிர்வாகத் திறன் இல்லாமையால் இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது.
தற்போதுள்ள 3,000-க்கும் மேற்பட்ட தொழில் பயிற்சி நிறுவனங்கள், பொறியியல் பட்டயம், பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆண்டுதோறும் சுமார் எட்டு லட்சம் மாணவர்கள் தேர்ச்சிபெற்று வேலைவாய்ப்பிற்காகக் காத்திருக்கின்றனர்.
ஐம்பது லட்சம் வேலை வாய்ப்பு
மேலும், சுமார் இரண்டு லட்சம் மாணவர்கள் பல்வேறு கல்வி நிலையில் தேர்ச்சி பெறுவதில்லை. ஆகவே, கருணாநிதி வழியில் அமையவிருக்கின்ற திமுக அரசு தமிழ்நாடு இளைஞர்களின் எதிர்காலத்தினைக் கருத்தில் கொண்டு 2020-2021 முதல் ஒவ்வொரு ஆண்டும் பத்து லட்சம் வேலை வாய்ப்புகள் என்ற அளவில் 2025-26 ஆம் ஆண்டு வரை ஐம்பது லட்சம் வேலை வாய்ப்புகளைத் தமிழ்நாட்டில் படித்த இளைஞர்களுக்கு வழங்கிட தீவிர முயற்சிகள் மேற்கொள்ளும்.