சென்னைப் பல்கலைக்கழகத்தின் 163ஆவது பட்டமளிப்பு விழா நாளை(ஏப்ரல் 8) நடைபெறுகிறது. இந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க உள்ள அனைவருக்கும் கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கௌரி செய்தியாளர்களிடம் பேசுகையில், "சென்னைப் பல்கலைக்கழகத்தின் 163ஆவது பட்டமளிப்பு விழா நாளை(ஏப்ரல் 8) நடைபெறுகிறது. இந்த பட்டமளிப்பு விழாவில் கரோனா வைரஸ் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி கலந்து கொள்ளும் அனைவருக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஏற்கெனவே பரிசோதிக்கப்பட்டதில், எனக்கு கரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பரிசோதனை செய்யப்படுபவர்கள் அனைவருக்கும் இன்று மாலைக்குள் முடிவுகள் தெரியவரும். பட்டமளிப்பு விழா அரங்கம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்று பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும் தகுந்த இடைவெளியைப் பின்பற்றி அனைவரும் அமர வைக்கப்படுவார்கள்.
இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழகத்தின் வேந்தருமான பன்வாரிலால் புரோகித், மூன்று பேருக்கு முனைவர் பட்டங்களை வழங்குகின்றார்.
பட்டமளிப்பு விழா பங்கேற்பாளர்களுக்கு கரோனா பரிசோதனை மேலும் சென்னை ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி சிறப்புரை ஆற்றுகிறார். பட்டமளிப்பு விழாவில் 68 பேருக்கு முனைவர் பட்டமும், தரவரிசைப் பட்டியலில் முதல் இடம் பிடித்த 86 பேருக்கு பதக்கங்களும்,100 பேருக்குப் பரிசுகளும் வழங்கப்படவுள்ளன.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டப்படிப்பை முடித்த ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 862 பேருக்குப் பட்டங்கள் வழங்கப்பட உள்ளது. அதேபோல் தொலைதூரக் கல்வியில் பயின்ற 12,011 பேருக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.
மேலும், அரியர் மாணவர்களுக்குத் தேர்ச்சி வழங்கியது ஏற்க முடியாது. அவர்களுக்கு சான்றிதழ் வழங்கக்கூடாது. அவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் என இன்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பட்டங்கள் பெறக்கூடிய பட்டியலிலிருந்து, அரியர் மாணவர்கள் நீக்கப் படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தற்போது சென்னை பல்கலைக்கழகம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.