மெட்ராஸ் ரேஸ் கிளப் பந்தயங்களில் பங்கேற்கும் குதிரைகளின் உரிமையாளர்கள் தங்களின் பெயர் மற்றும் குதிரைகளின் விவரம் குறித்து மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகத்திடம் பதிவு செய்யவேண்டும். இந்த பந்தயங்களில் எம்.ஏ.எம். ராமசாமி செட்டியாரின் செட்டிநாடு அறக்கட்டளைக்கு சொந்தமான குதிரைகளை பந்தயங்களில் பங்கேற்க அனுமதிக்க முடியாது என ரேஸ் கிளப் நிர்வாகம் கடந்தாண்டு மறுத்து உத்தரவிட்டது.
அதனை எதிர்த்து செட்டிநாடு அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஏ.சி. முத்தையா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி கடந்த ஜனவரி மாதம் பிறப்பித்த உத்தரவில், குதிரையின் உரிமையாளராக அறக்கட்டளை நிர்வாகம் இருக்கமுடியாது என்ற ரேஸ் கிளப்பின் வாதம் ஏற்புடையதல்ல. எனவே, செட்டிநாடு அறக்கட்டளைக்கு சொந்தமான குதிரைகளை, உரிய கட்டணங்கள் செலுத்தச் செய்து 2020-21ஆம் ஆண்டு நடக்கும் பந்தயங்களில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
இதுதொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும்போதே அறக்கட்டளைக்கு சொந்தமான 67 பழைய குதிரைகள் பந்தயங்களில் பங்கேற்க முடியாது என்றும், அறக்கட்டளை நிர்வாகம் புதிதாக வாங்கியுள்ள நான்கு குதிரைகளை பதிவு செய்ய முடியாது எனவும் மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம் விதிகளில் திருத்தம் கொண்டு தீர்மானம் நிறைவேற்றியது.