சென்னை: சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா அறக்கட்டளை வளாகத்தில் உள்ள ருக்மணி அருண்டேல் கல்லூரியில் படித்தபோது பாலியல் தொல்லைக்கு உள்ளானதாக அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முன்னாள் மாணவி ஒருவர் புகார் அளித்தார். அதன்கீழ் நடனத்துறை உதவிப்பேராசிரியர் ஹரி பத்மன் மீது பெண்கள் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், ஏப்ரல் 3ஆம் தேதி கைது செய்தனர்.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஹரி பத்மன் தாக்கல் செய்த மனு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு இன்று (ஏப்.25) விசாரணைக்கு வந்தது. அப்போது, ஹரி பத்மன் தரப்பில் கண்டிப்பான ஆசிரியரான தன் மீது, பழைய மாணவர்களும், தற்போது படிக்கும் மாணவர்களும் மிகுந்த மதிப்பு வைத்துள்ளதாகவும், தனது வளர்ச்சியைப் பிடிக்காத சிலர், மாணவிகளைத் தூண்டி விட்டு பொய் புகார் கொடுத்து உள்ளதாகவும் வாதிடப்பட்டது.
பழிவாங்கும் நோக்கில் தங்களுக்கு எதிராக இந்த புகார் அளிக்கப்பட்டு இருப்பதாகவும் எந்தவிதமான சட்ட வாய்ப்புகளையும் வழங்காமல் கைது நடவடிக்கைகளை காவல்துறை செய்துள்ளதாகவும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் நீதிமன்றம் விதிக்கின்ற நிபந்தனைகளை ஏற்க தயாராக இருப்பதாகவும், எனவே ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது.
அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான மாநகர குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன், ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். விசாரணை இன்னும் முடிவடையவில்லை என்றும், மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்திருப்பதால், முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.