தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அவதூறு கருத்து! ஆர்.பி.வி.எஸ்.மணியன் ஜாமீன் மனு தள்ளுபடி! சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அதிரடி! - today ltaest news in tamil

RBVS Maniyan Bail Petition Dismisses: அம்பேத்கர், திருவள்ளுவர் மற்றும் பட்டியலின பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட ஆர்.பி.வி.எஸ். மணியன் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

RBVS Maniyan Bail Petition Dismisses
ஆர்.பி.வி.எஸ்.மணியன் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 26, 2023, 8:04 AM IST

சென்னை: தியாகராய நகரில் செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற ஆன்மீக கூட்டத்தில் பேசிய, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில துணைத் தலைவரும், விவேக பாரதி அமைப்பின் நிறுவனருமான ஆர்.பி.வி.எஸ். மணியன், திருவள்ளுவர், அம்பேத்கர் மற்றும் பட்டியல் இனப் பெண்கள் குறித்து இழிவாகப் பேசியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை முன்னாள் மாவட்ட தலைவர் இரா.செல்வம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மேலும், ஆர்.பி.வி.எஸ். மணியன் தொடர்பான அவதூறு கருத்துகள் வீடியோவும் சமுக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவின. இதன் அடிப்படையில் ஆர்.பி.வி.எஸ்.மணியன் மீது இந்தியத் தண்டனைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகியவை உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில், மாம்பலம் காவல் நிலையத்தினரால் செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி அதிகாலையில் ஆர்.பி.வி.எஸ்.மணியன் அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து செப்டம்பர் 27ஆம் தேதி வரை ஆர்.பி.வி.எஸ்.மணியனை நீதிமன்ற காவலில் அடைக்கச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ். அல்லி உத்தரவிட்டார்.

இந்த நிலையில், உடல்நிலை மற்றும் வயதைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டுமென ஆர்.பி.வி.எஸ். மணியன் மனுத் தாக்கல் செய்தார். மேலும், நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி உறுதிமொழி பிரமாண பத்திரமும் அவர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. காவல் துறை தரப்பில் வெறுப்பு மற்றும் அவமதிப்பு கருத்துகளைத் தெரிவித்து உள்ளதாகவும், மருத்துவ சான்றுகள் அனைத்துமே 2 ஆண்டுகளுக்கு முன்பானவை என்றும் கூறி, ஆர்.பி.வி.எஸ். மணியனுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

ஆர்.பி.வி.எஸ். மணியனின் மனு மீது நேற்று (செப். 25) உத்தரவு பிறப்பித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ். அல்லி, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.

இதையும் படிங்க:காவிரி விவகாரம்: பெங்களுருவில் முழு கடையடைப்பு.. 430 தமிழக பேருந்துகள் நிறுத்தம்.. பயணிகள் அவதி!

ABOUT THE AUTHOR

...view details