சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் சென்னை மருத்துவக் கல்லூரி உதவி பேராசிரியர் டாக்டர் கார்த்தி(42) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அழுகிய நிலையில் கிடந்த அவரது சடலத்தை கைப்பற்றி தேனாம்பேட்டை போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 'எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை' என்ற கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
திருமணம் செய்துகொள்ளாமல் இருந்து வந்த கார்த்தி சென்னை மருத்துவக் கல்லூரியில் இரைப்பை, குடல் அறுவை சிகிச்சை பிரிவின் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், உறவினர் சிலர் கார்த்தியை பலமுறை செல்போனில் தொடர்பு கொண்டும் அவர் எடுக்காததால், உறவினர் அளித்த தகவலின் பேரில் கார்த்தியின் தோழி டாக்டர் ஸ்ரீவித்யா என்பவர் இன்று அவரது வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார். அப்போது, வீட்டில் டாக்டர் கார்த்தி அழுகிய நிலையில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது வீட்டில் உயிரை மாய்த்து கொள்வதற்கு முன்பு டாக்டர் கார்த்தி எழுதியிருந்த கடிதம் ஒன்று போலீசுக்கு கிடைத்தது. அதில், "எனது முடிவு என்னுடையது" என்று எழுதப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க:குருநானக் கல்லூரி மாணவர்கள் மோதல்... 12 பேர் மீது வழக்குப்பதிவு.. மீண்டும் மாணவர்கள் மோதல்!