பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் பாடத்தை எளிதாக கற்பிக்க சென்னை ஐஐடி திட்டம் சென்னை:சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி, இன்று (ஜன.03) ஐஐடி வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "2023ஆம் ஆண்டில், சென்னை ஐஐடி பல சாதனைகளைச் செய்தது. அதேபோல 2024ஆம் ஆண்டும் பல திட்டங்கள் உள்ளன. அதில் 366 நாளுக்கு ஒரு காப்புரிமை என்பதை இலக்காக நிர்ணயித்து உள்ளோம்.
இந்த ஆண்டில் சென்னை ஐஐடியில் இருந்து 100 புத்தாக்க நிறுவனங்களை உருவாக்கி, தொழில் ஊக்குவிப்பில் ஈடுபடுத்த உள்ளோம். தற்போது காலநிலையைக் கணிக்க முடியாததாக இருக்கிறது. எனவே, ரேடார் தொழில்நுட்பத்தில் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்தில் எவ்வளவு மழை பெய்யும் என்று முன்கூட்டியே கணித்து, பொதுமக்களுக்கு அதற்கேற்றவாறு முன்னெச்சரிக்கை செய்யும் வகையில், தொழில்நுட்பத்தை உருவாக்க ஆராய்ச்சியில் ஈடுபட உள்ளோம்.
செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, காசித் தமிழ் சங்கம் நிகழ்ச்சியில் பிரதமர் பேசியதை பிற மொழிகளில் கேட்க முடிந்தது. செயற்கை நுண்ணறிவு பயன்பாடு, மொழிபெயர்ப்புக் கருவிகளுக்கான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, அதனை மேம்படுத்த உள்ளோம்.
மருத்துவ தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு கண்டுபிடிப்புகள் வர இருக்கிறது. நல்ல தரமான மருத்துவம் கிராமப்புறங்களில் சென்றடைய, செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்துடன் செயல்படுத்த சென்னை ஐஐடியும் பங்களித்து வருகிறோம்.
அனைவருக்கும் ஐஐடிஎம் என்ற திட்டத்தின் கீழ் பிஎஸ் (டேட்டா சயின்ஸ் அண்ட் புரோகிராமிங்) பட்டப்படிப்பில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மற்றும் தமிழ்நாட்டில் உள்ள ஒரு லட்சம் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மின்னணுக் கருவிகளை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
சென்னை ஐஐடியில் ஏற்கனவே 'அவுட் ஆஃப் தி பாக்ஸ்' என்ற திட்டத்தின் மூலம், மாணவர்களுக்கு கணக்கு பாடம் எளிதில் புரியும் வகையில் கற்பிக்கப்பட்டு வருகிறது. அதில் அதிகளவில் மாணவர்கள் சேர்ந்து படித்து வருகின்றனர். ஆனால், மாணவர்களுக்கு அறிவியல் பாடத்தை புரிந்து கொள்வதில் சிரமம் உள்ளது.
எனவே, பள்ளி மாணவர்கள் அறிவியல் பாடத்தினை எளிதில் புரிந்து கற்கும் வகையில் பாடத்திட்டம் தயார் செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பாடத்திற்கும் 600 வீடியோக்கள் வரும். அந்த வகையில், மொத்தமாக 2,400 வீடியோக்கள் மூலம் பாடத்திட்டம் உருவாக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. முதலில் ஆங்கிலத்தில் ஜூலைக்குள் வெளியிடப்படும். அதனைத் தொடர்ந்து, தமிழ் உள்ளிட்ட 12 மாநில மொழிகளிலும் வெளியிடப்படும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க:பொங்கல் தொகுப்பில் சர்க்கரைக்குப் பதிலாக நாட்டு வெல்லம் தர வேண்டும் - தஞ்சை விவசாயிகள் கோரிக்கை!