தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாற்றுத்திறனாளிகள் நிவாரணத் தொகை - மாநில அரசு விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவு! - விளக்கமளிக்க உத்தரவு

மாற்றுத் திறனாளிகளுக்கு கரோனா பெருந்தொற்று நிவாரண உதவியாக வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.133 கோடி எப்படி பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது என்பது குறித்து மாநில அரசு விளக்கம் அளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

highcourt
highcourt

By

Published : Jul 8, 2021, 9:16 PM IST

சென்னை:மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு ஒதுக்கீடு செய்த ரூ.133 கோடியில் மீதமுள்ள 73 கோடி ரூபாயின் நிலை என்ன என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க, கடந்தாண்டு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்குத் தகுந்த நிவாரண உதவிகளை வழங்கக்கோரி, மூன்று அமைப்புகளின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இம்மனுக்கள் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது விழித்திறனற்றவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நிவாரண உதவி வழங்கும் திட்டம், விழித்திறனற்றவர்களுக்கு பொருந்தாது என தமிழ்நாடு அரசு தனது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும், விழித்திறனற்றவர்களுக்காக மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றார்.

அதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மாற்றுத் திறனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் மட்டும் நிவாரண உதவி வழங்கப்படும் எனவும், கூடுதல் தொகை வழங்குவது தொடர்பாக எந்த உறுதியும் அளிக்கவில்லை என அரசு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரண உதவி வழங்க, 133 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ததாகக் கூறும் மாநில அரசு, அதில் 6 லட்சத்து 94 ஆயிரம் பேருக்கு 64 கோடியே 42 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது எனவும், மீதத் தொகையை நிவாரண உதவி கிடைக்காதவர்களுக்கு வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அரசு ஒதுக்கீடு செய்த 133 கோடி ரூபாயில் மீதமுள்ள 73 கோடி ரூபாயின் நிலை என்ன என கேள்வி எழுப்பியதோடு, அந்தத் தொகை எப்படி விநியோகம் செய்யப்பட்டது என்பது தொடர்பான விவரங்களை மாநில அரசு தெரிவிக்க வேண்டுமென உத்தரவிட்டு, வழக்கின் விசாரணை அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.

இதையும் படிக்கலாமே:பத்திரப்பதிவுத் துறை ஊழல் குறித்த அறிக்கையைத் தாக்கல்செய்ய உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details