சென்னை மாநகராட்சியில், சொத்து வரி வசூல் செய்ய விதிகளை வகுக்கும்படி மாநகராட்சிக்கும், அரசுக்கும் உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் வி.பி.ஆர். மேனன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அடங்கிய அமர்வு, 2018ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற உத்தரவின்படி உயர்த்தப்பட்ட சொத்து வரியை அமல்படுத்தாமல் நிறுத்திவைக்க முடிவெடுத்தது ஏன்? என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி, அவற்றுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை செயலாளர் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, அரசின் அவசரப் பணியாக மாநகராட்சி ஆணையர் டெல்லி செல்வதால், அவர் இன்று நேரில் ஆஜராக முடியவில்லை எனவும், அவர் ஆஜராக அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரினார். இதையடுத்து, நீதிபதிகள், சொத்துவரியை உயர்த்தாமல் கடந்த 20 ஆண்டுகளாக அரசு தூங்கிக் கொண்டிருப்பதாகக் கண்டனம் தெரிவித்தனர்.
20 ஆண்டுகளில் நான்கு முறை வரியை உயர்த்தி இருக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், மேயர் பதவியை பிடிப்பது என்பதில் மட்டுமே அரசியல் கட்சியினர் ஆர்வம் காட்டுவதாகவும் குற்றஞ்சாட்டினர். சொத்துவரி உயர்த்தாதது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை செயலாளர் ஆகியோர் வரும் 18ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்ட வழக்கு : மூன்று மாதங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு