சென்னை: கடந்தாண்டுகரோனா பரவல் காரணமாக தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அதைப் பின்பற்றி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது வழக்கறிஞர்கள் நேரடியாக வர அனுமதி மறுக்கப்பட்டு, காணொலி காட்சி மூலமாக விசாரணைகள் நடத்தப்பட்டன.
நீதிபதிகள் முன்பு அரசு தரப்பு வழக்கறிஞர்கள் மட்டும் நேரில் ஆஜராகி வழக்குகளை நடத்தி வந்த நிலையில், கரோனா சிகிச்சைக்கான ஆக்ஸிஜன், படுக்கை வசதி வழக்குகள், சட்டப்பேரவை தேர்தல் தொடர்பான வழக்குகள், வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீட்டை எதிர்த்த வழக்குகள் உள்ளிட்ட முக்கிய வழக்குகளும் காணொலியில் நடத்தப்பட்டன.
இந்நிலையில் காணொலியில் ஆஜராவது சிரமமாக இருப்பதாக வழக்கறிஞர் சங்கம் வைத்த பல்வேறு கோரிக்கைகளையும், கரோனா பாதிப்புகள் குறைந்து வருவதையும் கருத்தில் கொண்ட உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் கடந்த வெள்ளிக்கிழமையன்று (நவ.12) கட்டுப்பாடுகளை தளர்த்தி சுற்றறிக்கை வெளியிட்டார்.