சென்னை: சட்டமன்றம், நாடாளுமன்றம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களின்போது, 50 வயதுக்கு மேலான பெண்களைத் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சசிகலா உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் நேற்று (நவ.17) விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் பெண்கள் நள்ளிரவு வரை இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பெற்று, வாக்குச்சாவடிகளுக்குச் செல்ல வேண்டியுள்ளதாகவும், அந்த நேரத்தில் அவர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என வாதிடப்பட்டது.
தேர்தல் பணிக்குச் செல்லும் பெண்களுக்கு போக்குவரத்து, உணவு, கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படுவதில்லை எனவும், 50 வயதுக்கு மேல் உள்ள பெண்கள், பல்வேறு உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்களைத் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.