சென்னை:பல்வேறு கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடமிருந்து அறக்கட்டளையின் பெயரில் வசூலித்த நன்கொடைகளுக்கு வருமானவரித்துறை மதிப்பீட்டு அலுவலர் வரிவிதித்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம், அறக்கட்டளைகளுக்கு வழங்கப்பட்டும் நன்கொடைகளுக்கு வரி வசூலிக்க முடியாது எனக்கூறி, மதிப்பீட்டு அலுவலர் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவுகளை எதிர்த்து வருமான வரித்துறை தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது ஷபிக் அமர்வு, கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடம் நன்கொடை வசூலிக்கத்தடை விதித்து தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியுள்ளதாகவும், இந்த சட்ட விதிகளை மீறி, நன்கொடை வசூலித்ததுடன், அதற்கு வரிவிலக்குப்பெறவும் கல்விநிறுவனங்கள் முயற்சித்துள்ளதாக கண்டனம் தெரிவித்தனர்.
இத்தொகைகள் நன்கொடையே என ஆதாரங்கள் மூலம் மதிப்பீட்டு அலுவலர் நிரூபித்துள்ளதாகக் கூறி, தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்த நீதிபதிகள், கல்வி நிறுவனங்களிடமிருந்து நன்கொடை தொகைக்கான, வருமான வரியை கணக்கிட்டு வசூலிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளனர்.
கல்வி நிறுவனங்கள் நன்கொடை வசூலிப்பது சட்டப்படி தண்டனைக்குரியது குற்றம் என்பதால், முந்தைய மதிப்பீட்டு ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரிக்கணக்குகளை, மதிப்பீட்டு அலுவலர், ஆதாரங்கள் மற்றும் சட்டத்துக்கு உட்பட்டு மறு ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளனர். நன்கொடை இல்லாமல் மாணவர்களுக்கு சேர்க்கை வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
நன்கொடை வசூலைத்தடுக்கும் வகையில் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இணையதளத்தை உருவாக்கி, எந்தெந்த கல்லூரிகள் நன்கொடை வசூலிக்கின்றன என்பதை மாணவர்களும் பெற்றோர்களும் தெரியப்படுத்த வேண்டும் எனவும் அந்த இணையதளம் தேசிய தகவல் மையத்தால் நிர்வகிக்கப்பட வேண்டும் என்றும், அந்த விவரங்களை மாணவர் சேர்க்கையின்போது மாநில அரசுகள் பத்திரிகைகளில் வெளியிட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.
மாணவர்களிடமிருந்து நன்கொடை வசூலிப்பது தண்டனைக்குரியது மேலும், ஒவ்வொரு மாநிலமும் கல்வி உரிமைக்காக சிறந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற அரசியலமைப்புச்சட்டம் கூறுவதாகவும், அதன்படி மாநில அரசுகள் கல்வி வழங்காததால், பெற்றோர்கள் அரசுப் பள்ளிகளை விட்டுவிட்டு தனியார் பள்ளிகளை நாடுவதாக நீதிபதிகள் வேதனைத்தெரிவித்துள்ளனர். கல்வி வழங்குவது என்பது ஒரு புனிதமான சேவை என்றும்; கல்வி என்பது பணம் சம்பாதிக்கும் தொழில் அல்ல என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தை ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவு