சென்னை: கோவையில் உள்ள தி பெடரல் வங்கியில் வீட்டு கடன் வாங்கியவர், தவணை தொகையை முறையாக செலுத்தவில்லை. இதனையடுத்து, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்த வங்கி நிர்வாகம், கடனில் வாங்கிய வீட்டை கையகப்படுத்தியது. பின்னர், அந்த வீடு பொது ஏலம் விடப்பட்டது. இதில் ஏலம் எடுத்தவர் பெயருக்கு, வீட்டை பத்திரப்பதிவு செய்யக்கோரி பொள்ளாச்சி சார் பதிவாளரிடம் வங்கி தரப்பில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
அப்போது அதை சார் பதிவாளர் நிராகரித்துள்ளார். ஏனென்றால், இந்த சொத்தை கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் முடக்கம் செய்துள்ளது என்றும், அதனால் பத்திரப்பதிவு செய்ய முடியாது என்றும் கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி உத்தரவிட்டது.
எனவே ஒரு ஆண்டு மட்டும் இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில், தனியார் வங்கி நிர்வாகம் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பத்திரப்பதிவு துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “ஒரு சொத்து முடக்கப்பட்டிருந்தால், அந்த சொத்தை தமிழ்நாடு பத்திரப்பதிவு விதி 55ஏ பிரிவின் கீழ் பத்திரப்பதிவு செய்ய முடியாது” என வாதிட்டார்.
இதற்கு வங்கித் தரப்பு வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், ‘ஜிஎஸ்டி சட்டத்தின்படி, பிரிவு 83இன் கீழ் ஒரு சொத்து முடக்கம் செய்யப்பட்டால், அந்த முடக்க உத்தரவு ஒரு ஆண்டுக்கு மட்டுமே அமலில் இருக்கும். அதன்பின்னர், அந்த உத்தரவு தானாகவே காலாவதியாகிவிடும். அதன்படி 2021ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் இந்த சொத்தை முடக்கம் செய்துள்ளது. இது கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் காலாவதியாகி விட்டது’ என தெரிவித்தார்.