தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன் ஜாமீன் வழக்கு- தீர்ப்பு ஒத்திவைப்பு! - திருமணம்

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாகத் துணை நடிகை தொடர்ந்த வழக்கில், கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்கும்வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன் ஜாமீன் கேட்டு மனு அளித்திருந்தார். அந்த மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

madras high court
உயர் நீதிமன்றம்

By

Published : Jun 9, 2021, 8:10 PM IST

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னை ஏமாற்றியதாகவும், புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும் நடிகை ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவருக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது என, நடிகை தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், ஜூன் 9ஆம் தேதி வரை மணிகண்டனை கைது செய்யக்கூடாது என, இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில், முன்னாள் அமைச்சரின் முன் ஜாமீன் மனு, நீதிபதி அப்துல்குத்தூஸ் முன்பு இன்று (ஜூன் 9) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது முன்னாள் அமைச்சர் சார்பில், 12 ஆண்டுகள் அரசு மருத்துவராகப் பணியாற்றி, பின் அரசியலுக்குள் நுழைந்துள்ளார். புகாரில் கூறியுள்ள குற்றச்சாட்டுகளைப் பொறுத்தவரை திருமணமானவர் எனத் தெரிந்து தான் அவருடன் நடிகை குடும்பம் நடத்தியுள்ளார்.

நடிகையைக் காயப்படுத்தியதாகக் கூறுவதற்கு, எந்த மருத்துவ ஆதாரங்களும் இல்லை. நடிகையைத் தெரியும். புகைப்படங்கள் குறித்தும் விசாரிக்க வேண்டும். அவர் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளார். விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயார். இடைக்காலமாக முன் ஜாமீன் வழங்க வேண்டும்.

காவல் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், அறிமுகமான மூன்று மாதங்களில் கருக்கலைப்பு செய்ததாகக் கூறப்பட்டுள்ளது. கரு உருவாகும் முன் எப்படி கருக்கலைப்பு செய்ய முடியும். உதைத்ததாக புகாரிலும் கூறப்படவில்லை. கருவுக்கு யார் காரணம் என கண்டுபிடிக்க வேண்டும். விசாரிக்கட்டும், நான் குற்றவாளி என்பதற்கு முகாந்திரம் இருந்தால் கைது செய்யட்டும்.

திருமணமாகாதவன் என்று அவரிடம் கூறவில்லை. அது அவருக்கும் தெரியும். அதனால் அவரை நம்ப வைத்து ஏமாற்றியதாகக் கூற முடியாது. எந்த மிரட்டலும் விடுக்கவில்லை. ஏப்ரல் 15 வரை மணிகண்டனுடன் வசித்ததாகக் கூறுவதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை.

குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் தரப்பு விளக்கம் அளிக்க அவகாசம் வழங்கியிருக்க வேண்டும். ஆரம்பகட்ட விசாரணை நடத்தியிருக்க வேண்டும் என, அமைச்சர் தரப்பில் வாதிடப்பட்டது.

அப்போது அரசுத் தரப்பில், கடந்த 2017இல் பரணி என்பவர் மூலம் மணிகண்டனுக்கு நடிகை அறிமுகம் ஆகியுள்ளார். நடிகை மலேஷியாவின் தென் மாநில தூதராக உள்ளார்.

மலேஷியாவில் முதலீடு செய்வது தொடர்பாகச் சந்தித்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியுள்ளார். கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்துள்ளார். உதைத்ததால் படுகாயமடைந்துள்ளார். விசாரானை ஆரம்ப நிலையில் உள்ளது.

ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. நடிகை மற்றும் மருத்துவர்களின் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. மணிகண்டனை காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

மூன்று முறை கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது. முக்கிய சாட்சிகள் விசாரிக்கப்பட வேண்டியுள்ளது. ஆதாரங்கள் சேகரிக்க வேண்டியுள்ளது. முக்கியப் பதவியை வகித்ததால் சாட்சிகளை கலைக்கக்கூடும் என வாதிடப்பட்டது.

தொடர்ந்து நடிகை தரப்பில், திருமணம் செய்து கொள்வதாகத் தோற்றத்தை ஏற்படுத்தியதால் உறவுக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக அளித்த வாக்குறுதியை மீறினால், உறவுக்கு அளித்த ஒப்புதலை ஒப்புதலாகக் கருத வேண்டாம் என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முதலில் நடிகையை யார் என தெரியாது எனக் கூறியவர், பிறகு சந்தித்ததை ஒப்புக் கொண்டுள்ளார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, இம்மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details