நடிகர் விஷால் நடித்துள்ள சக்ரா படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. டிரைடண்ட் ஆர்ட்ஸ் பட நிறுவன உரிமையாளர் ரவி தொடர்ந்த வழக்கில், நடிகர் விஷால் நடிப்பு, தயாரிப்பில் உருவாகியுள்ள சக்ரா திரைப்படத்தின் கதையை படத்தின் இயக்குநர் ஆனந்தன் தன்னிடம் முன்னரே கூறி, படத்தை தயாரிக்க ஒப்பந்தம் போட்டதாகவும், ஒப்பந்தத்தை மீறும் வகையில், விஷால் தயாரிப்பு, நடிப்பில் தன்னிடம் கூறிய அதே படக்கருவை உருவாக்கியுள்ளது காப்புரிமை சட்டத்திற்கு எதிரானது என்றும் குற்றம்சாட்டியிருந்தார்.
இதையடுத்து படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரிய வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து நேற்று முன்தினம் (பிப்.16) உத்தரவிட்டிருந்தது. திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், தடை காரணமாக படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த வழக்கு நீதிபதி சி. வி கார்த்திகேயன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, இயக்குநர் ஆனந்தன் ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனர் ரவியிடம் மேற்கொண்ட ஒப்பந்தம் விஷாலுக்கு முன்பே தெரியுமா, தெரிந்துதான் படத்தை தயாரித்தாரா போன்ற விஷயங்களெல்லாம் விரிவான விசாரணைக்கு பின்னரே தெரியவரும் என்பதாலும், தற்போதைய நிலையில் படம் வெளியாக தடை விதித்தால் வணிகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை கருத்தில் கொண்டு ஏற்கனவே விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்குவதாக உத்தரவிட்டார்.
எனினும் வழக்கு விசாரணையை நிலுவையில் வைப்பதாக தெரிவித்த நீதிபதி, நாளை முதல் வரும் மார்ச் 5ஆம் தேதி வரையிலான படத்தின் முதல் இரண்டு வார வசூல் விவரங்களையும், ஓடிடி தளங்களுக்கு படம் விற்பனை செய்யப்பட்டிருந்தால் அது தொடர்பான விவரங்களையும் நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டுமென நடிகர் விஷாலுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 10ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.
இதையும் படிங்க:ஷூட்டிங் ஸ்பாட்டில் ஷாட்டுக்கு ரெடியாகும் விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத்