தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக ஆட்சியில் டெண்டர் முறைகேடு வழக்கு: 5 நிறுவனங்களின் வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு! - சென்னை உயர் நீதிமன்றம்

டெண்டர் முறைகேடு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டதால் தங்கள் மீதான வழக்குகளை ரத்து செய்யக் கோரிய 5 நிறுவனங்கள் தாக்கல் செய்த வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்ய மறுத்து உத்தரவிட்டது.

madras high court
சென்னை உயர் நீதிமன்றம்

By

Published : Aug 2, 2023, 1:56 PM IST

சென்னை:கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி அறப்போர் இயக்கத்தின் ஜெயராம் வெங்கடேசன் மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதில் டெண்டர் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.பொன்னி ஆரம்ப கட்ட விசாரணை நடத்தி தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் வழக்கை கை விடுவது என அரசு முடிவு செய்தது. இந்நிலையில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை அடுத்து, முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக டெண்டர் முறைகேடு தொடர்பாகவும், வருமானத்துக்கு அதிகமாக 58 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாகவும் குற்றம் சாட்டி இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

அதேபோல் டெண்டரில் தொடர்புடைய நிறுவனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டன. தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக் கோரி எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் P.N.பிரகாஷ் மற்றும் R.M.T டீக்காராமன் அடங்கிய அமர்வு, டெண்டர் பணிகளில முறைகேடு தொடர்பான புகாரில் வேலுமணி மீதான வழக்கை மட்டும் ரத்து செய்வதாக உத்தரவிட்டது.

இந்நிலையில் எம்.எஸ். கன்ஷ்ட்ரக்சன் இன்ஃப்ரா லிமிடெட், ஆலம் கோல்டு, ஆலயம் ஃபவுண்டேஷன், வைதூரியா ஹோட்டல், கண்ஷ்ட்ரோ மால் ஆகிய நிறுவனங்கள் தங்கள் மீதான வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அதில், எஸ்.பி. வேலுமணி மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர் பொது ஊழியர். அவருக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்பதால் தங்கள் மீதான வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நடைபெற்றபோது, ஐந்து நிறுவனங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய எதிர்ப்பு தெரிவித்து அறப்போர் இயக்கம் சார்பில் இடையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டு, முறைகேட்டில் தொடர்புள்ளதற்கான ஆதாரங்கள் உள்ளதாக வழக்கறிஞர் சுரேஷ் வாதிட்டார். அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ் திலக் ஆஜராகி, இந்த வழக்கில் இறுதி விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

இதனையடுத்து இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாக கூறி ஐந்து நிறுவனங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய மறுத்து, வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், ஆறு வாரங்களில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டுமென லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: Parliament adjourned : 10வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்! எதிர்க்கட்சிகள் தொடர் அமளி!

ABOUT THE AUTHOR

...view details