தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

PMK Meeting: கடலூர் மாவட்டத்தில் பாமக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுப்பு! - today latest news in tamil

Madras High Court: பாமக-வின் ஆண்டுவிழா பொதுக்கூட்டத்தை கடலூர் மாவட்டத்தில் நடத்த அனுமதி அளிக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது

MHC refuse to hold the public meeting of PMK
கடலூர் மாவட்டத்தில் பாமக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுப்பு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 29, 2023, 7:31 PM IST

சென்னை: பாமக-வின் 35ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு, கடலூர் மாவட்டம் வடலூர் பேருந்து நிலையம் அருகே நாளை (ஆகஸ்ட் 30) பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி பாமக கட்சியின் மாவட்டச் செயலாளர் முத்துகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மேலும் அந்த மனுவில், பொதுக் கூட்டத்திற்கு அனுமதி வழங்கக் கோரி நெய்வேலி டி.எஸ்.பி.-யிடம் விண்ணப்பித்ததாகவும், ஆனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறி விண்ணப்பத்தை நிராகரித்ததாகவும் தெரிவித்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று (ஆகஸ்ட் 29) விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், பாமக கட்சி தொடங்கியது முதல் பல ஆண்டுகளாக அமைதியான முறையில் பொதுக் கூட்டம் நடத்தி வருவதாகவும், நாளைய (ஆகஸ்ட் 30) கூட்டத்திற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தயாராக உள்ள நிலையில் அனுமதி வழங்க மறுப்பதாகவும், வடலூர் சந்திப்பில் அனுமதிக்காவிட்டால் குள்ளஞ்சாவடியில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து அரசு தரப்பில், விவசாயிகளுக்கு ஆதரவாக என்.எல்.சி-யை எதிர்த்து போராட்டம் நடத்தியபோது, 27 அரசு பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டது உள்ளிட்ட புகார்களில் 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், இதன்மூலம் கட்சியின் செயல்பாடு வெளிப்படுவதாகவும் வாதிட்டார்.

மேலும், அதே இடத்தில் தற்போது பொதுக் கூட்டம் நடத்த அனுமதி கேட்பதாகவும், அனுமதி கொடுத்தால் என்.எல்.சி நிர்வாகத்திற்கு எதிராகப் பேசும்போது, மீண்டும் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படவும், காவல்துறை மீது தாக்குதல் நடத்தவும் வாய்ப்புள்ளது எனவும், ஆகவே கடலூர் மாவட்டத்திற்கு வெளியே பொதுக்கூட்டம் நடத்தினால், அதற்கு அனுமதியளிக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.ஆனால் பாமக தரப்பில், என்.எல்.சி. மட்டுமல்லாமல், கடலூர் மாவட்ட மக்களின் மற்ற அனைத்து பிரச்சினைகள் குறித்தும் பொதுக் கூட்டத்தில் பேச உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், பொதுக் கூட்டம் நடத்தும் அரசியல் கட்சியின் உரிமையைத் தடுக்க முடியாது என்றாலும், சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்த காவல்துறையின் அச்சத்தையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளதாகக் கூறி, கடலூர் மாவட்டத்தில் பாமக பொதுக் கூட்டத்தை நடத்த அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்தார்.

மேலும், விழுப்புரம் அல்லது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடத்துவது குறித்து பாமக முடிவெடுத்து, சம்பந்தப்பட்ட காவல்துறையை அணுகலாம் என்றும், அதில் அனுமதி வழங்கப்படும் பட்சத்தில் மாலை 6 மணி முதல் 8 மணி வரை மட்டுமே கூட்டம் நடத்த வேண்டும் என உத்தரவிட்டதுடன்.

அந்த பொதுக்கூட்டத்தில் நெய்வேலி போராட்டம் பற்றிப் பேசப் பேசக்கூடாது என்றும், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாதவாறு கட்சியினரை வழி நடத்த வேண்டிய பொறுப்பு கட்சித் தலைமைக்குத் தான் உள்ளது என்றும், மீறி பிரச்சினை ஏற்பட்டால் கட்சித் தலைமையே பொறுப்பேற்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

இந்த உத்தரவைப் பிறப்பித்த பிறகு, வழக்கறிஞர் கே.பாலு குறுக்கிட்டு, கடலூரில் தான் கூட்டம் நடத்தத் திட்டமிட்டதாகவும், வேறு மாவட்டத்தில் நடத்த விருப்பமில்லை எனவும் தெரிவித்து, வேறு மாவட்ட காவல்துறையை அணுக மாட்டோம் என நீதிபதியிடம் தெரிவித்தார். மேலும் தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து பாமக தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கோயில் அறங்காவலர் நியமனத்தில் முக்கிய முடிவு... இந்துசமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details