தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆன்லைன் சூதாட்டம் அதிர்ஷ்ட விளையாட்டா? - இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு - online rummy games

ஆன்லைன் சூதாட்டம் தடைச் சட்டத்துக்கு எதிரான வழக்குகளில், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து வழக்கை ஜூலை 13ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.

ஆன்லைன் சூதாட்டம் தடைச் சட்டம்
ஆன்லைன் சூதாட்டம் தடைச் சட்டம்

By

Published : Jul 3, 2023, 7:13 PM IST

சென்னை:ஆன்லைன் சூதாட்டம் தடைச் சட்டத்துக்கு எதிரான வழக்குகளில், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்குகளை ஜூலை 13ம் தேதிக்கு இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்து உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதித்து கடந்த ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் சார்பில் அதன் சார்புடைய சங்கங்கள் மற்றும் நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளில் தமிழ்நாடு அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள அதிகாரத்திற்கு உட்பட்டு இயற்றப்பட்டுள்ள இந்தச் சட்டம் செல்லுபடியாக கூடியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொது அமைதி, சுகாதாரம் மற்றும் சூதாட்டம் தொடர்பாக மட்டுமே இந்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளதாகவும், இந்த சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு முழு அதிகாரம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆன்லைன் விளையாட்டுக்கள் காரணமாக வேலையில்லா இளைஞர்கள், தின கூலிகள் ஆட்டோ டிரைவர்கள், ஒரு போலீஸ் என 32 பேர் இதுவரை தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், இந்தச் சட்டம் பொது மக்களின் நலனுக்கு அவசியமாகிறது என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று(ஜூலை 3)விசாரணைக்கு வந்த போது, ஆன்லைன் ரம்மி விளையாட்டு நிறுவனத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி வாதிட்டார்.

அதில் அவர், ரம்மி திறமைக்கான விளையாட்டு என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகவும், ஏற்கனவே தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா மாநில அரசுகள், ஆன் லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்த சட்டத்தை அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்கள் ரத்து செய்ததாகவும், அதனை எதிர்த்த மேல் முறையீட்டு வழக்குகளில் எந்த இடைக்கால உத்தரவையும் உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.

தற்போது, ஆன் லைன் விளையாட்டுக்களை அதிர்ஷ்ட விளையாட்டு எனவும், அதற்கு பலர் அடிமையாகி, நிதி இழப்புகளை சந்தித்து, தற்கொலைகள் செய்து கொள்வதாக கூறி தமிழ்நாடு அரசு இச்சட்டத்தை கொண்டு வந்துள்ளதாக குறிப்பிட்டார். இந்த சட்டத்தின் அடிப்படையில், கடுமையான குற்ற நடவடிக்கைகள் எடுப்பதால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்து, தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், இந்த வழக்கில் முன்னதாகவே தடை கோரி வாதிடப்பட்டதாகவும், அதை ஏற்க உயர் நீதிமன்றம் மறுத்து விட்டதாகவும் குறிப்பிட்டார். மேலும், இறுதி விசாரணைக்கு ஒரு தேதியை நிர்ணயிக்க வேண்டும் எனவும் கோரினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கில் இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க மறுத்து, வழக்குகளை இறுதி விசாரணைக்காக ஜூலை 13ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:செந்தில் பாலாஜியை எதிர்க்கட்சியாக இருந்தபோது விமர்சித்த விவகாரம் - முதல்முறையாக மனம் திறந்த முதலமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details