சென்னை:சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் அர்ச்சகர் நியமனத்திற்கான விண்ணப்பங்களை வரவேற்று கோயில் நிர்வாக அதிகாரி 2018ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டார். இதை எதிர்த்து அங்கு பணிபுரிந்துவந்த முத்து சுப்ரமணிய குருக்கள் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். ஆகமத்தின் அடிப்படையிலான கோயிலுக்கு அறிவிப்பில் கூறப்பட்டுள்ள தகுதிகள், ஆகமத்தின் அடிப்படை இல்லை எனக் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, ஒரு கோயிலின் ஆகமம் மற்றும் பூஜை முறைகளில் தேர்ச்சிப் பெற்ற, எவராக இருந்தாலும் அர்ச்சகராக நியமிக்கலாம் என்று தீர்ப்பளித்திருந்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து முத்து சுப்பிரமணிய குருக்கள் சார்பில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபுர்வலா, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோரது அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆகம கோயில்களில் அர்ச்சகர்களை பரம்பரையாக தான் நியமிக்க வேண்டும் என்றும், தனி நீதிபதியின் உத்தரவு உச்ச நீதிமன்றத்திற்கு எதிரானது என்றும் வாதிட்டு, இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.