தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கனகசபையில் பொதுமக்கள் தரிசிப்பதால் தீட்சிதர்களின் உரிமை எப்படி பாதிக்கப்படுகிறது? - உயர் நீதிமன்றம் கேள்வி

சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபையின் மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்தால் தங்களது உரிமைகள் பாதிக்கப்படுவதாக தீட்சிதர்கள் நினைத்தால், அவர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

kanagasabai-dharsan-if-chidambaram-temple-priest-affect-can-move-apex-court-mhc
கனகசபை தரிசனம் விவகாரம் - உச்சநீதிமன்றத்தை நாட தீட்சிதர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

By

Published : Jul 14, 2023, 2:12 PM IST

சென்னை: கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள கனகசபை ஏறி பக்தர்கள் தரிசனம் செய்வதன் மூலம் தீட்சிதர்களின் உரிமை பாதிக்கப்பட்டு இருந்தால், அவர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடைபெற்ற ஆனித்திருமஞ்சன விழாவை ஒட்டி, கனகசபை மண்டபத்தில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை என கோயில் தீட்சிதர்கள் பதாகை வைத்தனர். இதற்கு பல்வேறு தரப்பு மக்களிடம் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. பலத்த எதிர்ப்புகளுக்கிடையே அதை அறநிலையத் துறை அதிகாரிகள் அகற்றியதால், இந்த பிரச்னை மேலும் தீவிரம் அடைந்தது.

இந்த நிலையில், கனகசபையின் மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதித்து 2022ஆம் ஆண்டு மே 17ஆம் தேதி தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து, சென்னையைச் சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்து உள்ளார்.

அந்த மனுவில், ஏழு முதல் பத்து பேர் வரை மட்டும் தரிசனம் செய்யும் அளவில் மட்டுமே கனகசபை உள்ள நிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரும் கோயிலில் 300 முதல் 500 பேரை மட்டும் கனகசபையில் தினமும் தரிசனம் செய்ய அனுமதிப்பது பாரபட்சமாகிவிடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், கோயிலின் கால பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் கனகசபையில் நடத்தப்படும் சூழலில் பக்தர்களை அனுமதிப்பதால், வழிபாட்டு நடைமுறைகள் பாதிக்கப்படுவதாகவும் மனுவில் கூறப்பட்டு உள்ளது. அதேநேரம் தமிழ்நாடு அரசின் அரசாணை, உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கு முரணாக உள்ளதாகவும், கோயிலின் வழிபாட்டு முறைகளில் தலையிட அரசுக்கு அதிகாரம் இல்லை என்பதால் அரசாணை சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும் எனவும், அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கங்கப்பூர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம் ஆஜராகி, தீட்சதர்களின் உரிமைகளைப் பாதிக்கும் வகையில் கனகசபையில் இருந்து தரிசனம் செய்யலாம் என பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

இதனையடுத்து, “கோயிலை நிர்வகிக்கவே, உச்ச நீதிமன்றத்தால் தீட்சிதர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால், கனகசபையிலிருந்து பொதுமக்கள் தரிசிப்பதால் தீட்சிதர்களின் உரிமை எப்படி பாதிக்கப்படுகிறது?” என கேள்வி எழுப்பினார். தீட்சிதர்கள் பாதிக்கப்பட்டு இருந்தால், அவர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடாமல், அவர்கள் உரிமைகள் பாதிக்கப்படுவதாக மூன்றாவது நபரான மனுதாரர் தாக்கல் செய்த வழக்கை எவ்வாறு ஏற்க முடியும் என்றும் கேள்வி எழுப்பி, வழக்கின் விசாரணையை வருகிற அக்டோபர் 11ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: அரசு அறிவிக்கும் திட்டங்களை, அதிகாரிகள் 3 மாதத்திற்குள் செயல்படுத்த வேண்டும் - வேல்முருகன் வலியுறுத்தல்

ABOUT THE AUTHOR

...view details