சென்னை:கடந்த 2011ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி இரவு 9.30 மணியளவில், சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்த ரயில், மேல்பாக்கம் ரயில் நிலையம் அருகில், அரக்கோணத்தில் இருந்து காட்பாடி நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்த நிலையில், 71 பேர் படுகாயம் அடைந்தனர்.
விதிகளை மீறி நண்பருடன் மொபைலில் பேசிக் கொண்டே அதிவேகத்தில் அஜாக்கிரதையாக, சிக்னல்களை மதிக்காமல் ரயிலை இயக்கி விபத்தை ஏற்படுத்தியதாக, கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து சென்ற ரயிலின் ஓட்டுநர் ராஜ்குமாருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையும் படிங்க:தொகுப்பூதிய செவிலியர்கள் தொடர்பான வழக்கு; சரிபார்ப்புக் குழுவை அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவு!
இந்த வழக்கை விசாரித்த வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்றம், கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ராஜ்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ராஜ்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தர் மோகன், “இவ்வழக்கில் காவல்துறை, ரயில் இயக்கும்போது ராஜ்குமார் தனது நண்பருடன் கைப்பேசியில் பேசிக் கொண்டு இருந்தார் என்பதையும், அஜாக்கிரத்தையாக அதிவேகத்தில் ரயிலை இயக்கினார் என்பதையும், சிக்னல்களை மீறினார் என்பதையும் ஆதாரங்களுடன் நிரூபிக்க தவறிவிட்டது.
ராஜ்குமாருக்கு எதிரான எந்த ஆதாரங்களும் நிரூபிக்கப்படவில்லை. எனவே அவருக்கு விதித்த 10 ஆண்டு சிறை தண்டனை ரத்து செய்யப்படுகிறது” என்று தீர்ப்பளித்து உத்தரவு பிறப்பித்தார்.
இதையும் படிங்க:ஜன.11-க்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்து குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு!