சென்னை:திரித்து எழுதப்பட்ட, ஆட்சேபனைக்குரிய தகவல்களைக் கொண்டுள்ளதாகவும், பல சமூகத்தினரை விமர்சனம் செய்யும் வகையில் இருப்பதாகவும் கூறி 'மதுரை வீரன் உண்மை வரலாறு' என்கிற புத்தகத்துக்கு தடை விதித்து, புத்தகங்களை பறிமுதல் செய்ய 2015ஆம் ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து, அந்த புத்தகத்தின் ஆசிரியர் குழந்தை ராயப்பன், கடந்த 2017ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, குற்ற விசாரணை முறைச் சட்டம் 96வது பிரிவின்படி, புத்தகங்களை பறிமுதல் செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை மூன்று அல்லது மூன்றுக்கும் மேற்பட்ட நீதிபதிகள்தான் விசாரிக்க வேண்டும் எனக் கூறி, அந்த வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் அமர்வு அமைக்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்து உத்தரவிட்டார்.
அதன்படி, நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், சி.வி.கார்த்திகேயன், பி.தனபால் ஆகியோர் அடங்கிய முழு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், இரண்டு ஆண்டுகளுக்கு பின்தான் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என தெரிவித்தார். இதை அடுத்து, குற்ற விசாரணை முறைச் சட்டப்படியும், ரிட் மனுவாக தாக்கல் செய்ய உரிமை இல்லை என வாதிடப்பட்டது.